
பொதுக்கூட்டம் வாயிலாக மக்களிடம் சென்று, அரசின் முறைகேடுகள் குறித்து சொல்லி, ஆட்சி மாற்றத்தை உருவாக்குவோம் எனத் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஸ்டாலின் தமது கடிதத்தில், “மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்பவர்கள் இந்திய நாட்டையும் அதன் அங்கமான தமிழ்நாட்டையும் கலவரக் காடாக்கி, மதம் – கலாச்சாரம் - இனம் – மொழி - அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தி, அமைதியைக் குலைத்து; வளர்ச்சியைப் பின்னடையச் செய்து, கஜானாவைக் கொள்ளையடித்து அனைத்து மக்களையும் பட்டப்பகலிலும் ஏமாற்றும் பம்மாத்துப் போக்கைக் கடைப்பிடித்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் நடைபெற்று வருவது ஆட்சியல்ல; வெறும் காட்சி; அதுவும் பொம்மலாட்டக் காட்சி; ஏழாண்டுகளாக தமிழ்நாடு அல்லல்களை அனுபவித்து வருகிற அழிவின் நீட்சி. அதனைக் கண்டித்துதான் உத்தமர் காந்தியடிகளின் பிறந்தநாளான அக்டோபர் 2ந் தேதிக்கு அடுத்த இரு நாட்களில் அதாவது, அக்டோபர் 3, 4 தேதிகளில் தமிழ்நாட்டில் 120 இடங்களில் கழகத்தின் சார்பில் ஊழல் அரசை உலகுக்குத் தோலுரித்துக் காட்டும் கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன.
தமிழகத்தின் 120 இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களுக்காக கழக நிர்வாகிகளும் உடன்பிறப்புகளும் ஓடியாடி வேலை செய்து வருவதை உடனுக்குடன் அறிகிறேன். ஒரு பொதுக்கூட்டத்தை இன்னொரு பொதுக்கூட்டம் வெல்ல வேண்டும் என்கிற ஆரோக்கியமான ஆக்கபூர்வமான போட்டி மனப்பான்மையுடன் கழகத்தினர் பணியாற்றும் நிலையில், எந்த இடத்திலும் சுணக்கம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
கழகத்தினருடன் பொதுமக்களும் பெருமளவில் பங்கேற்கும் வகையில் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் சிறக்கட்டும்! மக்களிடம் செல்வோம்! மக்களுடன் செல்வோம்! மறைக்கப்படும் ஊழல்களை அக்குவேறு ஆணிவேராக அம்பலப்படுத்துவோம்! தமிழ்நாடு சீரழிந்து கிடப்பதை எடுத்துரைப்போம். மேடையில் ஒலிக்கின்ற ஒவ்வொரு சொல்லும் ஜனநாயகக் களத்திற்கான ஆயுதங்களாகட்டும்! அந்த ஆயுதத்தை, அறவழிக்களத்தில் கையிலேந்தி ஆட்சி மாற்றத்தை உருவாக்குவோம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.