[X] Close

எம்ஜிஆர், கருணாநிதி நட்பை ஸ்டாலின் மறக்கக்கூடாது - தம்பிதுரை அழைப்பு

Thambidurai-welcome-MK-Stalin-to-MGR-100-Function

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் அவர் பங்கேற்க வேண்டும் என்றும் மக்களை துணை சபாநாயகர் தம்பிதுரை வேண்டுகொள் விடுத்துள்ளார்.


Advertisement

சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் வரும் 30-ம் தேதி மாலை 4 மணிக்கு எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிறைவு பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில், எம்ஜிஆர் படத்தைத் திறந்து வைத்தும், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச இருக்கிறார். வாழ்த்துரை வழங்குவோர் பட்டியலில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக எம்பி கனிமொழி மற்றும் சென்னையைச் சேர்ந்த அதிமுக எம்எல்ஏக்களுடன், திமுக எம்எல்ஏக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்களின் பெயர்கள் அழைப்பிதழில் இடம்பெற்றிருந்தன.‌ 

இதில் ஸ்டாலின் பங்கேற்பாரா? என கேள்விகள் எழுந்தன. இதையடுத்து ‘அழைத்துவிட்டது அரசு... ஸ்டாலின் தயாரா?' என்ற தலைப்பில் அதிமுக அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா பத்திரிகையில் கட்டுரை வெளிவந்தது. இந்நிலையில் கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, “சென்னையில் நடைபெறவுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் திமுக கலந்துகொள்ள வேண்டும். திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என அண்ணாவின் தலைமையை ஏற்று பணியாற்றியவர் எம்ஜிஆர். கழகத்துக்கும், எம்ஜிஆருக்கும் ஏற்பட்ட பாசம் சொல்லிக்கொடுத்தோ, தூண்டிவிடப்பட்டோ வரவில்லை என அண்ணா ‘நாடோடி மன்னன்’ பட வெற்றி வாழ்வில் கூறினார். திமுக வளர்வதற்கும், ஆட்சிக்கு வருவதற்கும் எம்ஜிஆர் பாடுபட்டவர். அண்ணா மறைந்த பிறகு தனக்கு முதல்வர் பதவி வேண்டும் என எம்ஜிஆர் கேட்கவில்லை. கருணாநிதியை முதல்வராக்கினார். எனவே திமுக நன்றி மறந்துவிடக் கூடாது” என்று கூறினார்.


Advertisement

தொடர்ந்து பேசிய அவர், “ஸ்டாலின் தந்தையை முதல்வராக்கியது, கருணாநிதியுடன் எம்ஜிஆருக்கு இருந்த நட்பு ஆகியவற்றை ஸ்டாலின் மறந்துவிடக் கூடாது. எம்ஜிஆர் அதிமுகவை உருவாக்காமல் இருந்தால் தேசிய கட்சிகள்தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்திருக்கும். காமராஜர் தலைமையில் காங்கிரஸ் வளர்ந்து கொண்டிருந்தது. அதை முறியடித்து திராவிட இயக்கத்தை காப்பாற்றியவர் எம்ஜிஆர். பெருமையையும், ஆற்றலையும், மக்கள் செல்வாக்கையும் உணர்ந்த ராஜூவ் காந்தி, எம்ஜிஆருக்கு பாரத ரத்னா விருதை வழங்கினார். எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை திமுக புறக்கணிப்பது வருத்தத்தை தருகிறது.  ஸ்டாலினுக்கு அழைப்பு தரப்பட்டுள்ளது. அமைச்சர் அந்தஸ்தில் ஸ்டாலின் உள்ளார். அவர் கலந்து கொள்ள வேண்டும் என்பதே வேண்டுகோள்” என தெரிவித்தார். 
 

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close