[X] Close

சர்வதேச படகு போட்டி: நடுக்கடலில் உயிருக்குப் போராடிய கடற்படை வீரர் மீட்பு

Navy-Commander-Rescued-3-Days-After-Injury

சர்வதேச படகுப் போட்டியில் பங்கேற்றபோது நடுக்கடலில் படுகாயமடைந்து தவித்து வந்த இந்திய கடற்படை கமாண்டர் பத்திரமாக மீட்கப் பட்டுள்ளார்.


Advertisement

உலகை கடல் வழி சுற்றிவரும் 'கோல்டன் குளோப்' எனப்படும் சர்வதேச படகுப் போட்டி நடந்து வருகிறது. பிரான்சில் இருந்து ஜூலை 1 ஆம் தேதி துவங்கிய இந்தப் போட்டியில், 30 ஆயிரம் மைல் துாரத்தை தனி நபராக படகில் கடந்து வர வேண்டும். நவீனத் தொழில்நுட்பங்களை பயன் படுத்தாமல் பாய்மர படகுகளை கொண்டு நடத்தப்பட்ட போட்டி இது.


Advertisement

 இதில் இந்தியாவின் சார்பில் கடற்படையைச் சேர்ந்த கமாண்டர், அபிலாஷ் டோமி (39) கலந்து கொண்டார். இவர் கேரள மாநிலம் ஆலப்புழா வை சேர்ந்தவர். உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட, 'துரியா' என்ற படகில் 84 நாட்களில் 10 ஆயிரத்து 500 மைல் கடந்து போட்டியில் மூன்றாவது இடத்தில் இருந்தார். 

இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் பெர்த் அருகே தென் இந்தியப் பெருங்கடலில் பயணித்தபோது, கடலில் ஏற்பட்ட சீதோஷ்ண நிலை மாற்றம் மற்றும் 14 அடி உயரத்துக்கும் எழுந்த அலைகள் காரணமாக அவர் சென்ற படகு சேதமடைந்தது. இதில் அவரது முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்ததில் இருந்து அவருக்கு தண்ணீர் கூட கிடைக்கவில்லை. இதனால் கடல் தண்ணீரை குடித்து வந்துள்ளார். அவரது படகில் இருந்த ரேடியோ பேட்டரிகள் செயல் இழந்துவிட்டதால் தகவல் அனுப்பவும் முடியவில்லை.


Advertisement

இதுகுறித்து அறிந்த ஆஸ்திரேலிய கடற்படை மற்றும் பிரெஞ்ச் கப்பல் அவரை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது. இந்தியப் பெருங் கடல் பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த இந்திய போர்க்கப்பலும் மீட்புப் பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஆஸ்திரேலிய கடற்படையும் பிரெஞ்ச் கப்பலும் அவர் தத்தளிக்கும் இடத்தை கண்டுபிடித்து நெருங்கியது. இன்று அவரை பத்திரமாக மீட்டுள்ளது. முதலில் அவருக்கு குடி தண்ணீர் வழங்கி, தங்கள் கப்பலுக்கு அவரைக் கொண்டு வந்தனர். அவரது முதுகு காயத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 அவர் பத்திரமாக மீட்கப்பட்டதை இந்திய கடற்படையும் உறுதி செய்துள்ளது. 

கமாண்டர் அபிலாஷ் டோமி 2012-ம் ஆண்டிலும் கடல் பயணம் செய்து உலகை சுற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close