Published : 30,Mar 2017 01:52 PM
நகை போச்சே..! டார்ச்சரில் சிக்கிய டவுட் மனைவி

கணவன் மீதான சந்தேகத்தால், டார்ச்சருக்குள்ளான மனைவி, ரூ. 3 கோடி மதிப்பிலான நகைகளை இழந்தார்.
மும்பையில் உள்ள பொவாய் பகுதியைச் சேர்ந்தவர் நுடன் மாங்கே. இவரது கணவர் லலித். தொழிலதிபரான இவர், சில நிறுவனங்களை நடத்தி வருகிறார். லலித், அவரது நிறுவனத்தில் பணியாற்றும் இளம் பெண் அதிகாரியோடு நெருக்கமாகப் பழகி வருவதாக, நுடனுக்குச் சந்தேகம். நாளாக நாளாகச் சந்தேகம் வலுப்பெற, ஆதாரத்தோடு அவரைப் பிடிக்க வேண்டும் என முடிவெடுத்தார். எவ்வளவோ முயன்றும் ஆதாரம் கிடைக்கவில்லை. பின்னர், காட்கோபர் பகுதியில் டிடெக்டிவ் ஏஜென்சி நடத்திய ராஜேஷ் துல்சிதாஸ் என்பவரிடம் சென்றார் நுடன்.
‘எங்கிட்ட வந்துட்டீங்கள்ல, நான் பார்த்துக்கிறேன்’என்று துப்பறியும் வேலையில் இறங்கினார் ராஜேஷ். இதற்காகச் சில லட்சங்களைச் சம்பளமாகப் பெற்றார். நுடன் பசையுள்ள பார்ட்டி என்பதைப் புரிந்துகொண்ட ராஜேஷ், அவரிடம் முடிந்தவரை பணத்தைக் கறக்கத் திட்டமிட்டார்.
’உங்க கணவருக்கும் அந்தப் பெண்ணுக்கும் நெருக்கம் என்பது உண்மைதான். அவர் அந்தப் பெண்ணுக்கு சில நகைகளைக் கொடுக்க இருக்கிறார். உங்கள் வீட்டில் இருக்கும் நகைகளை (சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பு) எங்கிட்ட கொடுங்க, பாதுகாப்பா வச்சிருக்கிறேன்’என்றார் ராஜேஷ், பந்தாவாக.
அதை உண்மை என்று நம்பிய நுடன், அப்படியே பத்திரமாகத் தூக்கிக் கொடுத்தார் நகையை. பிறகு நுடனிடம் ஏதேதோ பொய் சொல்லி வந்திருக்கிறார். ஆதாரத்தை மட்டும் அவரால் தரமுடியவில்லை. இதனால் சந்தேகம் வந்தது நுடனுக்கு. ஒரு கட்டத்தில் நகையைத் திருப்பிக் கேட்டார். மறுத்த ராஜேஷ், வில்லன் ஸ்டைலில், ‘எங்கிட்ட அதைக் கேட்டா, நம்ம ரெண்டு பேருக்கும் தொடர்பு இருக்குன்னு வெளியே பரப்புவேன். அப்படி சொல்லாம இருக்கணும்னா, எனக்கு 50 லட்சம் ரூபாய் வேணும்’என்று வேறு மிரட்டியிருக்கிறார். ஷாக் ஆன நுடன் கப்சிப் ஆனார். இதோடு நிறுத்தவில்லை, அந்த டிடெக்டிவ்!
’உன் குழந்தையையும் கடத்திருவேன்’ என்று மீண்டும் மிரட்ட, கணவன் மீதான சந்தேகத்தில் இப்படிச் சிக்கலில் சிக்கிக்கொண்டோமே என நினைத்த நுடன், வேறு வழியின்றி பொவாய் போலீஸ் நிலையம் சென்றார். நடந்த கதையை விலாவாரியாகச் சொல்லிக் கதறியிருக்கிறார். பிறகென்ன, ராஜேஷையும் அவரது கூட்டாளிகளையும் உள்ளே தள்ளியிருக்கிறது போலீஸ்.