
இந்தியா - பாகிஸ்தான் இடையே நிறுத்தி வைக்கப்பட்ட அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கக் கோரி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப் படைத் தளத்துக்குள் புகுந்து பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து கடந்த 2015 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் தொடங்கிய விரிவான அமைதி பேச்சுவார்த்தையை, இந்தியா நிறுத்திக் கொண்டது. அதன் பின் பாகிஸ்தான் தரப்பில் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்ட பிறகும், பயங்கரவாதத்தை ஒழித்தால் மட்டுமே, பேச்சுவார்த்தையை தொடர முடியும் என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்து வந்தது.
இந்நிலையில், பாகிஸ்தானின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான், நிறுத்தப்பட்ட அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கக் கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தின்போது, இருநாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களும் சந்தித்து பேச அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பொறுப்பேற்ற நாள் முதலாக, இந்தியாவுடன் நல்லுறவை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். பாகிஸ்தானுடன் நட்புறவை நாட இந்தியா ஒரு அடி எடுத்து வைத்தால், அதற்கு பிரதிபலனாக இரு அடிகளை நாங்கள் எடுத்து வைப்போம் என இம்ரான் கான் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்