Published : 19,Sep 2018 08:58 AM

சேலத்தில் இரண்டாவது விமான சேவை :  ‘ட்ரூஜெட்’ நிறுவனம் அறிவிப்பு

Salem-to-Chennai-Second-Air-Service-launch-Next-Month

சேலம் மாவட்டம் கமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து ட்ரூஜெட் நிறுவனம் இரண்டாவது விமான சேவையை அடுத்த மாதம் தொடங்க உள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள கமலாபுரத்தில் சேலம் விமான நிலையம் உள்ளது. ஏழு ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு இந்த விமான நிலையத்தில் இருந்து விமான போக்குவரத்து சேவையை முதல்வர் பழனிசாமி மற்றும் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு ஆகியோர் கடந்த மார்ச் 25ஆம் தேதி தொடங்கி வைத்தனர். இதனையெடுத்து 'ட்ரூ' ஜெட் நிறுவனம் தினசரி சென்னையில் இருந்து காலை 9.50 மணிக்கு புறப்பட்டு சேலத்துக்கு 10:40 மணிக்கு சென்றடையும். பின்னர் சேலத்தில் இருந்து அதே விமானமானது காலை 11.00 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 11.50 க்கு சென்னை விமான நிலையத்தை வந்தடையும். இந்நிலையில் 'ட்ரூ' ஜெட் நிறுவனம் தனது இரண்டாவது விமான சேவையை அடுத்த மாதம் 28ஆம் தேதி தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

சேலத்தில் இருந்து மாலை நேரத்தில் மற்றொரு விமான சேவையை துவங்க பயணிகள் சார்பில் வேண்டுகோள் இருந்தது. இதை மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் பரிசீலனை செய்து, ட்ரூஜெட் நிறுவனமே மாலை நேரத்தில் ஒரு விமான சேவை வழங்க அனுமதி வழங்கியது. அதன்படி, 72 இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானம் வரும் அக்டோபர் 28-ம் தேதி முதல், தினமும் மாலை 4:00 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு 5:10க்கு சேலம் வந்தடையும். பின்னர் சேலத்திலிருந்து அதே விமானமானது மாலை 5:40 மணிக்கு புறப்பட்டு மாலை 6:45 மணிக்கு சென்னை விமான நிலையம் சென்றடையும் என  ட்ரூஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மேலும் ட்ரூஜெட் நிறுவனத்தின் இந்த சேவைக்கான ஏற்பாடுகளை தீவரமாக செய்து வருகிறது. மற்றுமொரு விமான சேவையால் சேலத்திலிருந்து வெளிநாடு செல்லும் பயணிகளுக்கும், டெல்லி, கொல்கத்தா, மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் பயணிகளுக்கும் இந்த சேவை பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்டுகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்