Published : 09,Jan 2017 11:29 AM
ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கில் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில், மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய தயாராக இருப்பதாக அப்போலோ மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும் மூன்று நீதிபதிகள் குழு அமைத்து விசாரணை நடத்தக் கோரியும் அதிமுக உறுப்பினர் ஜோசப் தொடர்ந்த வழக்கில் இன்று விசாரணை நடைபெற்றது. அதில் மனுதாரர் எந்த அடிப்படையில் விசாரணை கோருகிறார் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஜெயலலிதா பொதுவாழ்வில் இருந்தார் என்பதற்காக தனிப்பட்ட உரிமைகளைத் தாண்டி இந்த வழக்கு விசாரிக்கப்படவேண்டுமா என்றும் கேட்டனர்.
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் குறித்து அவரது குடும்பத்தினர் யாரும் நீதிமன்றத்தை அணுகாதது சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். இதற்கிடையே, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை தொடர்பான தகவல்கள் சீலிட்ட கவரில் தாக்கல் செய்யப்படும் என அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு 4 வார காலம் அவகாசம் அளித்த உயர்நீதிமன்றம், விசாரணையை பிப்ரவரி 23ம் தேதிக்கு ஒத்திவைத்தது.