Published : 10,Sep 2018 10:30 AM
கமல்ஹாசன் உடன் யோகேந்திர யாதவ் சந்திப்பு

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை, ஸ்வ்ராஜ் அப்யான் கட்சியின் தலைவர் யோகேந்திர யாதவ் இன்று சந்தித்தார். மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
எட்டு வழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளை சந்தித்து ஆலோசனை நடத்துவதற்காக யோகேந்திர யாதவ் கடந்த செப்டம்பர் 8ம் தேதி தமிழகம் வந்தார். ஆனால், விவசாயிகளை சந்திக்கும் முன்பே திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே யோகேந்திரா யாதவ் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டார். யோகேந்திர யாதவ் விவசாயிகளை சந்தித்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
இதனையடுத்து, யோகேந்திர யாதவ் கைது செய்யப்பட்டதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்தார். இதுதொடர்பாக கமல் பேசுகையில், “கருத்து கேட்டலைக் கூட தடுக்கும் அதிகாரம் இவர்களுக்கு எப்படி வந்தது. சட்டத்தைக் காரணம் என்று சொல்லி குரல்களே எழாமல் செய்வது சர்வாதிகாரம் என்றே எனக்கு தோன்றுகிறது. இது ஜனநாயக நாடு என்பதை வலியுறுத்த வேண்டியுள்ளது. ஜனநாயகத்தின் வழியே தான் பலரும் சர்வாதிகாரத்தை கைப்பற்றி இருக்கிறார்கள் என்பதையும் நினைவு கூற வேண்டியுள்ளது. மக்கள் கருத்துக்களை பயமில்லாமல், தெளிவாக எடுத்துச் சொல்லும் சூழல் வர வேண்டும். யோகேந்திர யாதவின் கைது கண்டனத்திற்குரியது” என்றார்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை இன்று நேரில் சந்தித்த யோகேந்திர யாதவ், தான் கைது செய்யப்பட்ட போது ஆதரவு அளித்தமைக்கு நன்றி தெரிவித்தார்.