Published : 10,Sep 2018 09:28 AM
விலைவாசி உயர்வில் மோடி மவுனம் காக்கிறார் - ராகுல் குற்றச்சாட்டு

ரபேல் ஒப்பந்தம் முதல் விலைவாசி உயர்வு வரை அனைத்து பிரச்னைகளிலும் பிரதமர் மோடி மவுனம் காப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. ராஜ்காட்டிலுள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு ராகுல் தலைமையிலான எதிர்க்கட்சியினர் ராம்லீலா மைதானத்திற்கு பேரணியாகச் சென்றனர். இப்போராட்டத்தில் தேசியவாத காங்கிரஸின் சரத்பவார், லோக் ஜனதா தளம் கட்சியின் சரத் யாதவ் உள்ளிட்ட 21 கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கட்சித் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்றனர். பேரணியின் இறுதியில் பேசிய ராகுல்காந்தி, மக்கள் மற்றும் விவசாயிகள் என அனைத்து தரப்பினரின் மனதில் உள்ள வேதனை தங்கள் மனதிலும் இருப்பதாக கூறினார். அனைத்து பிரச்னைகளிலும் பிரதமர் மவுனம் காப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.