Published : 28,Aug 2018 08:40 AM
புதிதாய் பிறந்திருக்கிறேன்: தலைவரான பின் ஸ்டாலின் பேச்சு!

திமுக பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. இதில் திமுக செயல் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்றார். அவர் தலைவர் ஆனது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் ஏற்புரை வழங்கும்போது, கருணாநிதியின் காந்த வார்த்தையான, ’என் உயிரினும் மேலான தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளே...’ என்று ஆரம்பித்தார். இதைக் கேட்டதும் பொதுக்குழு உறுப்பினர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
தொடர்ந்து அவர் பேசும்போது கூறியதாவது:
‘நான் தலைவர் கலைஞர் இல்லை. அவர் போல் பேசத் தெரியாது. பேசவும் முடியாது. அவரைப் போல மொழியை ஆளத் தெரியாது. அனால் எதையும் முயன்று பார்க்கிற துணிவை கொண்டவனாக இருக்கிறேன். அருகில் கலைஞர் இல்லை என்றாலும் அவர் ஏற்றிய கொள்கை தீபம் இருக்கிறது. நம் உயிரும் உயிர்மூச்சும் இருக்கும்வரை அது தொடர்ந்து இருக்கும்.
முப்படையும் சமமாக இருக்கிற தைரியத்தை அது கொடுக்கும். தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்று நான் வாழ்ந்ததாக கலைஞர் என்னை பாராட்டியிருக்கிறார். உழைப்பு உழைப்பு உழைப்பு என்று என்னை வாழ்த்தியிருக்கிறார் தலைவர். என்னைவிட கழகம் பெரிது என்பார் கலைஞர். அவர் வழியில் நானும் சொல்கிறேன், என்னைவிட கழகம் பெரிது. கழகம்தான், உதயசூரியன் சின்னம்தான் எந்த தனிமனிதனைவிட பெரிது. கருப்பு, சிவப்பு சின்னம்தான் பெரிது.
கலைஞர் இடத்தில் இன்றைக்கு பேராசிரியர் இருக்கிறார்கள். வாழும் திராவிட தூணாக பேராசிரியர் இருக்கிறார்கள். ’எனக்கு அக்கா உண்டு, அண்ணன் இல்லை. பேராசிரியர்தான் என் உடன்பிறவா அண்ணன்’ என்று சொல்லியிருக்கிறார் தலைவர். எனவே பேராசிரியர்தான் எனக்கு பெரியப்பா. இப்போது அப்பா இல்லை என்றாலும் பெரியப்பாவாக இருக்கிறார் பேராசிரியர். அப்பாவுக்கு முன்பே என்னை தலைவராக வழிமொழிந்தவர் பெரியப்பா. அடுத்த தலைமைக்கான தகுதி ஸ்டாலினுக்குத்தான் இருக்கிறது என்று பேசியவர் பெரியப்பா, பேராசிரியர். அவர் முன்னால் தலைவராக தேர்வு பெற்றதை பெருமையாக கருதுகிறேன். இங்கு வந்ததும் அரங்கத்தில் இருந்தவர்கள் முகத்தை பார்த்தேன். என்னை பள்ளி மாணவனாக, கல்லூரி மாணவனாக, கழகபேச்சாளராக, இளைஞர் அணி செயலாளராக, சட்டமன்ற உறுப்பினராக, மேயராக, பொருளாளராக, செயல்தலைவராக என்னை பார்த்தவர்கள் இருக்கிறார்கள். கலைஞரும் படிப்படியாக வளர வேண்டும் என்றுதான் விரும்பினார். அதையேதான் நானும் செய்தேன். கலைஞரின் மகன் என்பதை விட கலைஞரின் தொண்டன் என்று சொல்லிக்கொள்வதில்தான் பெருமைபடுகிறேன்.
திராவிட முன்னேற்ற கழகம் எனும் 70 ஆண்டு கால வருடத்தை நெஞ்சில் சுமந்துகொண்டு புதிய எதிர்காலம் நோக்கி கழகத்தை அழைத்து செல்ல நினைக்கிறேன். சுயமரியாதை எனும் முதுக்கெலும்பில்லாத மாநில அரசையும் சமூக நீதியையும் பகுத்தறிவு சிந்தனையையும் சிதைக்கிற மத்திய அரசையும் பார்க்கும்போது வேதனை தந்துகொண்டிருக்கிறது. தமிழகத்தை திருடர்களிடம் இருந்து விடுவிப்பதுதான் முதல் கடமையாக இருக்க வேண்டும். நம் நாட்டின் ஆபத்து என்று சொல்ல வேண்டும் என்றால் தமிழகத்தின் ஆட்சியாளர்களை நினைத்தால், ’நெஞ்சு பொறுக்குதில்லையே’ என்கிற பாரதியின் வரிகள்தான் ஞாபகத்துக்கு வருகிறது.
இன்று நீங்கள் பார்க்கும், கேட்கும் மு.க.ஸ்டாலினாகிய நான், புதிதாய் பிறக்கிறேன். இது வேறு ஒரு நான். திராவிட முன்னேற்ற கழகத்தின் மரபணுக்களோடு இதோ உங்கள் முன்னால் பிறந்திருக்கிறேன். என்னோடு பிறந்திருக்கிற கோடிகணக்கான உடன்பிறப்புகளுக்கு வாழ்த்துகள். இது புதிய நாம். அந்த அழகான எதிர்காலத்தில் கழகத்தினர். யார் அந்த கழகத்தினர்? உலகில் பிறந்த ஒவ்வொருவரையும் மதிப்போர், யார் தவறு செய்தாலும் எதிர்ப்போர், ஆணும் பெண்ணும் சமம் என மதித்தல், திருநங்கைகளின் உரிமை பெற்றுக்கொடுத்தல், பிற மொழிகளை அழித்து இந்தியா முழுவதற்கும் மதசாயம் பூச நினைக்கும் கட்சிகளை எதிர்த்தல் ஆகியவைதான் எனது கனவுகள். இந்த எதிர்காலம் தூரத்தில் இல்லை. இந்த கனவை தனிமனிதனாக என்னால் செய்ய முடியாது.
நீங்கள் இல்லாமல் என்னால் முடியாது. இது என் கனவல்ல, உங்கள் கனவு, தமிழகத்தின் கனவு. வா, என்னோடு கைகோர்க்க வா, இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்க நினைக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்ட வா. முதுகெலும்பில்லாத மாநில அரசை தூக்கி எறிவோம் வா. நாம் அனைவரும் அதற்கு சேர்ந்தே செல்வோம். இங்கிருக்கிற மூத்தோர் என் அண்ணன்கள், அக்காள்கள். இளையோர், தம்பிகள், தங்கைகள். இனி இதுதான் என் குடும்பம். இனி தலைமைக்கு அனைவரும் ஒன்றுதான். நானும் ஒரு தொண்டன். இங்கு அனைவரும் சமம். உங்களின் எண்ணங்களின் பிரதிபலிப்பாக தலைமை நிச்சயமாக இயங்கும்.
தமிழ்நாட்டு மக்களுக்காக உழைப்போம். தந்தை பெரியார் கற்றுத்தந்த சுயமரியாதை, சமத்துவம் இவற்றில் இருந்து ஒருநாளும் பின்வாங்க போவதில்லை. தலைவர் கலைஞர் இல்லாத கோபாலபுரம் வீட்டை, அவர் இல்லாத அறிவாலயத்தை, அவர் இல்லாத மேடையை நினைத்துப் பார்க்க முடியவில்லை. என்னுள் துடிக்கும் இதயம் அவர் தந்தது. அவர் அண்ணாவிடம் வாங்கியதை தந்தது. என் கடைசி மூச்சு இருக்கும் வரை தமிழனமே உனக்காக நான் போராடுவேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.