
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் குழந்தை கடத்தப்பட்டது தொடர்பாக குழந்தையின் தாயை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அத்திக்குளம் என்ற இடத்தில் பிரகாஷ் என்பவரது 2 வயது குழந்தை சாய் தர்ஷன், வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது கடத்தப்பட்டான். குழந்தையை, இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்துவந்த நபர் கடத்திச்சென்றுள்ளார். அக்கம்பக்கத்தினர் விரட்டிச் சென்றும் குழந்தையுடன் அவர் தப்பிச்சென்றுவிட்டார்.
இந்நிலையில் கடத்தப்பட்ட குழந்தையுடன் அந்த நபர் செல்லும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. குழந்தையை கடத்துவதற்கு முன் சில முறை அந்த பகுதியை அவர் நோட்டமிட்டதும் குழந்தையின் அருகில் யாரும் இல்லாததை அறிந்து கடத்தியதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, சிசிடிவி கேமரா காட்சியின் உதவியுடன் குற்றவாளியையும் குழந்தை சாய் தர்ஷனையும் கண்டுபிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தேடும் பணி நடைபெற்று வருகிறது. கடத்தியவர் பெங்களூருவில் இருப்பதாக வந்த தகவலையடுத்து பெங்களூருக்கு தனிப்படை விரைந்துள்ளது.
இந்நிலையில் கடத்தப்பட்ட குழந்தையின் தாய் முத்துலட்சுமியை காணவில்லை என புகார் எழுந்துள்ளது. எனவே முத்துலட்சுமியையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.