[X] Close

வாஜ்பாய் ஆட்சி கவிழக் காரணமான ஜெயலலிதா !

vajpayee-and-jayalalitha-were-political-relationship-special-story

1996 ஆம் ஆண்டு தமிழக அரசியலில் மிக முக்கியமான ஆண்டாக இப்போதும் எப்போதும் பார்க்கப்படும். ஆம், 1992 முதல் 1996 வரை தமிழகத்தின் முதல்வராக இருந்தார் ஜெயலலிதா. பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே 1996 ஆம் நடந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ஜெயலலிதா தலைமயிலான அதிமுக அரசு படுதோல்வியை சந்தித்தது. ஏன் 1996 ஆம் தேர்தலில் படுதோல்வியை தழுவினார் ஜெயலலிதா. 4 இடங்களில் மட்டுமே அஇஅதிமுக வென்றது. ஜெயலலிதா கூட பர்கூரில் சுகவனம் என்ற திமுக வேட்பாளரிடம் தோற்றுப் போனார். ஜெயலலிதாவுக்கு எதிராக அமைந்த திமுக கூட்டணி மாபெரும் வெற்றிப்பெற்று, திமுக தலைவர் மு.கருணாநிதி தமிழகத்தின் முதல்வராக பதவியேற்றார்.

இதன் பின்பு 1996 டிசம்பர் 7 ஆம் தேதி ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு ஜனவரி 3 ஆம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார் ஜெயலலிதா. 1991 முதல் 1996 வரை ஜெயலலிதா ஆட்சியில் நிகழ்ந்த ஊழல்களை விசாரிப்பதற்காக மூன்று சிறப்பு நீதிமன்றங்களை கூட திமுக அரசு அப்போது ஏற்படுத்தியிருந்தது. ஆனால் 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது அதிமுக. 1998 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி தேர்தல் பிரசாரத்துக்காக அத்வானி கோவை வந்தார். ஆனால் அவர் பொதுக் கூட்டம் பேசும் இடத்தில் இருந்து கொஞ்ச தூரத்தில் குண்டு வெடித்தது. மக்கள் சுதாரிப்பதற்குள் அடுத்தடுத்து காந்திபுரம், பெரியகடைத் தெரு, ரயில்வே ஸ்டேஷன் என குண்டுகள் வெடித்தன. ஏறத்தாழ 50 பேர் இறந்தனர். குண்டுவெடிப்பு சம்பவம் தி.மு.கவுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. 


Advertisement

1998 ஆம் தேர்தலில் இந்தக் குண்டு வெடிப்பை காரணம் காட்டி அதிமுக - பாஜக கூட்டணி 30 இடங்களை கைப்பற்றியது. இதில் அதிமுக மட்டுமே 18 இடங்களை கைப்பற்றியது. ஆனால் மத்தியில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பாஜகவுக்கு பெரும்பான்மையில்லை. ஆனால் பாஜகவும், அதிமுகவை பெரிதும் நம்பி ஆட்சி அமைத்தது. அடல் பிஹாரி வாஜ்பாய் பாரதப் பிரதமரானார். ஆனால் பாஜக ஆட்சி அமைத்த சில நாள்களிலேயே ஜெயலலிதா பாஜகவுக்கு அழுத்தம் கொடுக்க தொடங்கினார். இதில் முக்கியமான அழுத்தம் "திமுக ஆட்சியை கலைக்க வேண்டும்" என்பதே. இதுபோல பல்வேறு கோரிக்கைகளை ஜெயலலிதா பாஜகவிடம் அடுக்கிக்கொண்டே சென்றார். திமுக ஆட்சியை கலைப்பதற்கு பாஜகவும் வாஜ்பாயும் ஒருபோதும் ஒத்துக்கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் தான் சொல்பவர்கள்தான் அமைச்சராக இருக்க வேண்டும் என்று வாஜ்பாயை வலியுறுத்தினார் ஜெயலலிதா. அதற்கெல்லாம் வாஜ்பாய் ஒத்துக்கொள்ளாமல் உறுதியாக மறுத்துவிட்டார்.

1999 ஆம் ஆண்டு ஜெயலலிதா, வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க கட்சிக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் வாங்கினார். நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டுவரப்பட்டது. அதில், ஒற்றை வாக்கு வித்தியாசத்தில் பா.ஜ.க தோல்வி அடைந்தது. இதைப் பயன்படுத்தி காங்கிரஸ், ஆட்சியைக் கைப்பற்றத் துடித்தது. ஆனால், அதற்கும் போதுமான இடங்கள் இல்லை. மீண்டும் ஒரு பாராளுமன்றத் தேர்தலுக்குத் தமிழகம் தயாரானது. அப்போது திமுக - பாஜக கட்சிகள் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டன.

1998 இல் பாஜக அரசுக்கு ஆதரவு கடிதம் கொடுப்பதற்கே கண்ணாமூச்சி ஆட்டம் ஆடினார் ஜெயலலிதா. அதிமுகவுடன் தனது 14 மாத கூட்டணி ஆட்சிக் குறித்து வாஜ்பாய் பலமுறை வருத்தப்பட்டு பேசியிருக்கிறார். அதில் ஒரு முறை "இந்த 14 மாதங்கள் என் அரசியல் வாழ்வின் மிக முக்கியமான மாதங்கள். இந்த 14 மாதங்களில் நான் அனுபவித்த துன்பங்களை, 1975 – 1977 காலகட்டத்தில்,  பிரதமர் இந்திரா காந்தி கொண்டு வந்த அவசர நிலை காலத்தின்போது என்னை சிறையில் அடைத்த போது கூட நான் அனுபவத்தது இல்லை. காலையில் தூங்கி எழும்போது இன்று இரவு நான் பிரதமராக படுக்க செல்லுவேனா அல்லது அரசு கவிழ்ந்து பதவி இழந்து படுக்க செல்லுவேனா என்று  எனக்குத் தெரியாது" என வாஜ்பாய் குறிப்பிட்டார்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close