[X] Close

சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்த கருணாநிதி ! ட்விட்டர் முதல் ஃபேஸ்புக் வரை அவரே ...

Karunanidhi-s-Death--viral-photos

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் 7.8.2018 மாலை 6.10 மணிக்கு காலமானார். ராஜாஜி ஹாலில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. பிரதமர் மோடி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு சென்றனர். கருணாநிதியின் மறைவு செய்தி உலக அளவில் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது. இந்நிலையில் அவருடைய மறைவையொட்டி சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய சில புகைப்படத்தையும் அதன் பிண்ணனியையும் பார்போம்.


பத்து நாட்களுக்கு மேலாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கருணாநிதியை கவனித்துக் கொள்வதற்காக அங்கு தங்கியிருந்த கருணாநிதியின் மகள் செல்வி, துர்கா ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் மருத்துவமனையிலிருந்து அழுதுகொண்டே வெளியேறி கருணாநிதியின் இல்லம் அமைந்துள்ள கோபாலபுரத்திற்கு சென்றனர். 7.8.2018 அன்று மாலை 6.50  கருணாநிதி இறந்த செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு சில மணி நேரங்கள் முன்னதாகவே கருணாநிதியின் உறவினர்கள் கண்ணீருடன் வெளியேறியதால் மருத்துவமனையின் முன்பு குவிந்திருந்த திமுக தொண்டர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். முறையான அறிவிப்பு வருவதற்கு முன்பாகவே இது போன்ற புகைப்படங்கள் வேகமாக பரவத் தொடங்கின.  


Advertisement

“அப்பா அப்பா” என்பதைவிட, “தலைவரே தலைவரே”
 என நான் உச்சரித்ததுதான் என்வாழ்நாளில் அதிகம்.
 அதனால் ஒரே ஒரு முறை, இப்போது ‘அப்பா’
 என்று அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே?

                      - கண்ணீருடன்
                              மு.க.ஸ்டாலின் என
                             
தன் தந்தை கருணாநிதியின் மறைவிற்கு இரங்கல் செய்தி வெளியிட்ட திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஒருமுறையேனும் இப்போது ‘அப்பா’ என அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே?.. என எழுதி இருந்த இரங்கல்பா அனைவரையும் கண்கலங்க வைக்கும்படியாக இருந்தது. இந்த அறிக்கை நேற்று முழுவதுமே சமூக வலைதளங்களில் வைரலாக வலம் வந்தது. 


Advertisement


திமுக தலைவரின் மறைவையொட்டி  ஒடிசாவைச் சேர்ந்த பிரபல மணல் சிற்பியான சுதர்சன் பட்நாயக் மணலில் கருணாநிதியின் உருவத்தைச் சிற்பமாக வடிவமைத்து இருந்தார். நாட்டில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளை மணல் சிற்பமாக சுதர்சன் பட்நாயக் தொடர்ந்து செதுக்கி வருகிறார். அந்த வகையில், கருணாநிதியின் மறைவைத் தொடர்ந்து, அவரது உருவம் பதிந்த சிற்பத்தை பூரி கடற்கரையில் சுதர்சன் உருவாக்கினார்.அதில், 1924-2018 ஆம் ஆண்டைக் குறிப்பிட்டு ஜாம்பவான் கருணாநிதிக்கு அஞ்சலி என்ற வாசகம் இடம்பெற்றது. இப்புகைப்படம் தான் பல திமுக தொண்டர்களின் முகநூலிலும் இரங்கல் செய்திக்காக பதிவிடப்பட்டது. 

 கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய திமுக கோரிக்கை வைத்தது. அதை தமிழக அரசு ஏற்கவில்லை. இதனையடுத்து திமுக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை அவசர வழக்காக அன்று இரவே உயர்நீதிமன்றம் விசாரித்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், சென்னை மாநகராட்சியும், தமிழக அரசும் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது. மேலும் வழக்கை காலை விசாரிப்பதாக அறிவித்தது. இதையடுத்து இந்த வழக்கு நேற்று காலை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதத்துக்கு திமுக வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் இரதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்குமாறு அரசுக்கு அதிரடி உத்தரவிட்டனர். இந்நிலையில் திமுக தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் வில்சன் புகைப்படத்தை திமுக தொண்டர்கள் வேகமாக பரப்பினர். அவருடைய புகைப்படத்தை பதிவிட்டு  “கலைஞரின் உடலை மெரினாவில் புதைக்க வாதாடிய திமுக வழக்கறிஞர் வில்சனை எப்போதும் கலைஞர், "நீ வில்சன் அல்ல, "வின்"சன் " என்று சொல்லி பெருமைப்படுத்துவாராம். நிரூபித்திருக்கிறார் வின்சன்” ! என பதிவிட்டு வந்தனர். 

 உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் விசாரணை நேற்று காலையும் தொடர்ந்தது. அரசு தரப்பும் திமுக தரப்பும் கடுமையாக வாதம் செய்த இவ்வழக்கில், இறுதியாக கருணாநிதியை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்குமாறு அதிரடி தீர்ப்பை வழங்கினர். இந்தத் தீர்ப்பை, ராஜாஜி ஹாலில் கருணாநிதியின் உடல் அருகே நின்றுகொண்டிருந்த மு.க.ஸ்டாலினிடம், துரைமுருகன் மற்றும் ஆர்.எஸ் .பாரதி ஆகியோர் தெரிவித்தனர். இதைக் கேட்ட மு.க.ஸ்டாலின் உணர்ச்சி பெருக்கால் கண்ணீர்விட்டு அங்கு கூடியிருந்தவர்களை நோக்கி கும்பிட்டார். பின்னர் அவர் தடுமாறியத்தைக் கண்டதும் அருகில் இருந்த கனிமொழி, துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி ஆகியோரும் கண்ணீர் விட்டனர். இதைக் கண்ட தொண்டர்களும் கண்ணீர் விட்டனர். 

கருணாநிதியின் இறுதி ஊர்வலம் நேற்று மாலை 4 மணிக்கு தொடங்கியது. ராஜாஜி ஹாலில் இருந்து புறப்பட்டு சிவானந்தா சாலை, வாலாஜா சாலை வழியாக இறுதி ஊர்வலம் அண்ணா சதுக்கம் சென்றது. ராணுவ வாகனத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் மாலை 6.15 மணியளவில் அண்ணா நினைவிடம் வந்தது. மெரினா வந்தடைந்த கருணாநிதியின் உடலுக்கு தரைப்படை, கப்பற்படை, விமானப்படை வீரர்கள் ராணுவ மரியாதை செலுத்தினர். ராணுவ வீரர்கள் கருணாநிதியின் உடலை சுமந்து சென்று தரையில் வைத்தனர். அதன்பின் குடும்ப உறுப்பினர்களின் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டது. ஸ்டாலின், அழகிரி, மு.க.தமிழரசு, ராசாத்தி அம்மாள், செல்வி, துர்கா ஸ்டாலின், கனிமொழி, சொர்ணம் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் கருணாநிதி உடலுக்கு மலர் தூவி இறுதி அஞ்சலி செலுத்தினர். இறுதியாக தலைவர்கள் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகனை ஸ்டாலின் மற்றும் கனிமொழியின் மகன் இருவரும் கைபிடித்தப்படி அழைத்து வந்து  வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உடலுக்கு மரியாதை செய்ய வைத்தனர். கண் கலங்கியப்படி தன் இறுதி மரியாதையை செலுத்தி பின் தன் 50 ஆண்டுகளுக்கு மேலான நண்பனுக்கு  ‘சல்யூட்’ செலுத்திவிட்டு அந்த இடத்தில் இருந்து நகர்ந்தார். இந்த காட்சி அனைவரையும் கண் கலங்கும்படியாக இருந்தது. 

கடந்த சில வருடங்களாக அவர் பயன்படுத்தி வந்த சக்கர நாற்காலியின் புகைப்படம் தற்போது, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்தப் புகைப்படத்தை பகிரும் தொண்டர்கள், உருக்கமான வரிகளை பகிர்ந்து வருகின்றனர். கருணாநிதி கடந்த சில ஆண்டுகளாக நடப்பதை நிறுத்திவிட்டார். அரசு விழாக்கள், பொது நிகழ்ச்சிகள் என எங்கும் கருணாநிதியுடன் கூடவே பயணித்தது, அந்தத் தானியங்கி இருக்கை. இப்போது "தலைவர் இல்லாத இருக்கை இனி எங்கே தனியே பயணிக்கும்" என திமுக தொண்டர்கள் உருக்கமாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

 

 ‘கோபாலபுரம் இன்சைடு’ என்ற கேப்சனோடு பதிவிடப்பட்டுள்ள ஒரு புகைப்படத்தில் கருணாநிதி பயன்படுத்தி வந்த சக்கர நாற்காலி ஒரு அறையில் ஓரமாக விடப்பட்டிருக்கிறது. அந்த சக்கர நாற்காலியை இயக்க பயன்படுத்தப்படும் கீ-யை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.  அதே புகைப்படத்தின் நடுவே கருணாநிதியுன் உருவம் பொறித்த படம் மேசையின் மீது  வைத்து அதற்கு மாலை அணிவிக்கப்பட்டுயிருக்கிறது. அதன் முன் கருப்பு நிற நாய் சோகத்துடன் படுத்திருக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. அதே படத்தில் மூன்றாவது படத்தில் அவர் செல்லமாக வளர்த்த வெள்ளை நிற நாய் சோகத்துடன் படுத்து இருப்பதை வட்டமிட்டு காட்டியுள்ளனர். 

பி.ஆர்.எம்.எம்.சாந்தகுமார். ஆழ்வார்பேட்டை உள்ள காவேரி மருத்துவமையில் இருந்து கருணாநிதியின் உடலை கோபாலபுரம் இல்லத்துக்கும், சி.ஐ.டி. காலனி இல்லத்துக்கும், தொடர்ந்து ராஜாஜி ஹாலுக்கும் சாந்தகுமார் ஓட்டிச்சென்றார். புதிதாக வாங்கப்பட்ட வெள்ளை நிறத்திலான ‘பிளையிங் ஸ்குவாட்’ ஆம்புலன்ஸ் வாகனம்தான், கருணாநிதியின் உடலை எடுத்துச்செல்ல பயன்படுத்தப்பட்டது. முன்னதாக ஜெயலலிதா 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி இரவு மரணம் அடைந்தபோது, அவரது உடல் ஆம்புலன்ஸ் வாகனத்தில், அப்போலோ ஆஸ்பத்திரியில் இருந்து போயஸ் தோட்ட இல்லத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு சந்தனப் பேழையில் அவரது உடல் வைக்கப்பட்டு ராஜாஜி ஹாலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டியவரும், சாந்தகுமார்தான். இவரின் புகைப்படமும் நேற்று இணையதளங்களில் பரவியது. 

 


Advertisement

Advertisement
[X] Close