
தமிழகத்தில் முதன்முறையாக காவல்நிலையத்தில் பெண்களுக்கான சிறப்பு ஆலோசனை மையம் சென்னையில் திறக்கப்பட்டுள்ளது.
சென்னை, நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள ஆயிரம் விளக்கு காவல்நிலைய வளாகத்தில் பெண்களுக்காக, குடும்ப நல ஆலோசனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் திறந்து வைத்தார். மாநில மகளிர் ஆணையம், தமிழக காவல்துறை, சமூக நலத்துறை இணைந்து இந்த மையத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தேவையான ஆலோசனைகள் இங்கு வழங்கப்படும்.
அத்துடன் பெண்களுக்கு சட்ட வழிகாட்டுதல் ஆகியவற்றை வழங்க பயிற்சி பெற்றவர்கள் இந்த மையத்தில் இருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் இங்கு ஆலோசனை வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மாநில மகளிர் ஆணையத் தலைவர் கண்ணகி பாக்யநாதன், சமூக நலத்துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன், சமூக சேவகர் சோபா கண்ணா, கூடுதல் டிஜிபி அம்ரீஷ் புஜாரி, கூடுதல் ஆணையர் சாரங்கன் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் பங்கேற்றனர்.