Published : 31,Jul 2018 01:36 PM
“ப்ளீஸ் வீட்டில் முயற்சி செய்யுங்க” - தோனியின் சேட்டை சேலஞ்ச்

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. அடுத்து நடைபெற்ற ஒருநாள் போட்டி தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது இங்கிலாந்து அணி. இதனால் அடுத்து நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இரு அணிகளுக்கும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது. இதற்காக இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் ரசிகர்களால் ‘தல’ என அழைக்கப்படும் தோனி, இந்திய டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்றதால், தனது விடுமுறையை கொண்டாடி வருகின்றார். இந்தியாவின் பிரபலமான விளையாட்டு வீரர் யார்? என்ற கணக்கெடுப்பு அண்மையில் நடத்தப்பட்டது. இதில் தோனி முதலிடம் பிடித்தார். அவருக்கு அடுத்த படியாக சச்சின் இரண்டாம் இடத்தையும், விராட் கோலி மூன்றாம் இடத்தையும் பிடித்தார். டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்ற பின்னரும், இந்த அளவிற்கு கிரிக்கெட் உலகில் பிரபலம் வாய்ந்தவராக தோனி திகழ்கிறார்.
இந்நிலையில் தோனி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதை தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ள அவர், “இது வேடிக்கைகாக தான். ப்ளீஸ் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார். அந்த வீடியோவில், வீட்டிற்கு வெளியே மழை பெய்து கொண்டிருக்கிறது. பலர் தோனி செய்யும் வேடிக்கையை வீடியோ பதிவு செய்துகொண்டிருக்கின்றனர்.
ஒரு சிறிய சைக்கிளில் உட்கார்ந்திருக்கும் தோனி, கூலிங் கிளாஸ் போடுகிறார். பின்னர் தனது கையில் ஒரு கட்டையை எடுத்து, வாயில் கவ்விக்கொள்கிறார். காதில் ஒரு ஹெட்போன் மாட்டிக்கொண்டுள்ளார். அந்த சைக்கிளை சுற்றி சதுர வடிவில் கம்பி ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. சைக்கிளை காலால் எந்தி புறப்படும் தோனி, மேட்டில் இருந்து கீழே வந்து நிற்கிறார். அவர் காதில் இருந்த ஹெட்போன் வாயில் இருக்கும் கட்டையில் முட்டி நிற்கிறது.