திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெறும் காவேரி மருத்துவமனை, வழக்கத்துக்கு மாறாக நேற்று பரபரப்போடு காணப்பட்டது. நேற்று மாலை முதல் அங்கு நடந்தேறிய நிகழ்வுகளை தெரிந்து கொள்வோம்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் நேற்று மாலை 4 மணியளவில் இருந்து திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிய தொண்டர்கள் அதிக அளவில் குவியத் தொடங்கினர். மாலை 5.30 மணியளவில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் காவேரி மருத்துவமனைக்கு சென்றார். அப்போது அங்கு தொண்டர்கள் அதிகளவில் குவிந்து 'எழுந்து வா தலைவா' என தொடர்ந்து முழக்கம் எழுப்பிக்கொண்டே இருந்தனர். சுமார் 6 மணியளவில் வெளியேவந்த திமுக எம்பி கனிமொழி, அக்கட்சியின் மகளிரணி தொண்டர்களிடம் கலைந்துசெல்லுமாறு வேண்டுகோள் விடுத்தார். எனினும் கருணாநிதியின் உடல்நலம் குறித்து அறிந்துகொள்ள அங்கு தொண்டர்கள் குவிந்தவண்ணமே இருந்தனர். மாலை 6.30 மணியளவில் சட்டப்பேரவை தலைவர் தனபால், அவரைத் தொடர்ந்து அப்போலோ மருத்துவமனையின் இயக்குநர் பிரீத்தி ரெட்டி ஆகியோர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து நடிகர்கள் செந்தில், மயில்சாமி உள்ளிட்டோர் காவேரி மருத்துவமனைக்கு சென்று, திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்தனர். பின்னர் சிறிதுநேர இடைவெளியில் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, திமுக எம்பிகள், எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக காவேரி மருத்துவமனைக்கு வரத் தொடங்கினர். இதனால் தொடர்ந்து தொண்டர்கள் குவிந்துக்கொண்டே இருந்தனர். இதற்கிடையில் மாலை 7 மணி முதல் திமுக தலைவர் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களான ராஜாத்தி அம்மாள், துர்கா ஸ்டாலின், மு.க.தமிழரசு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் ஒருவர் பின் ஒருவராக சிறிதுநேர இடைவெளியில் அங்கு செல்லத் தொடங்கினர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.
இரவு 8 மணியளவில் ஆழ்வார்பேட்டை பகுதியில் திடீரென மழை பெய்யத்தொடங்கியது. மழையையும் பொருட்படுத்தாமல் திமுக தொண்டர்கள் அதிகளவில் அங்கு காத்திருக்கத் தொடங்கினர். அப்போது திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் செல்லத் தொடங்கினர். பின்னர் காவேரி மருத்துவமனைக்கு வந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து செயல்தலைவர் மு.க ஸ்டாலினிடம் கேட்டறிந்தார். இதற்கிடையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிந்துகொள்ள சென்னை முழுவதும் திமுக தொண்டர்கள் புறப்பட இருந்ததாக தகவல் பரவியது. இதனையடுத்து மாநகரம் முழுவதும் காவல்துறையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
காவேரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வெளியாகும் அறிக்கைக்காக தொண்டர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். சரியாக இரவு 9.50 மணியளவில் காவேரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து அறிக்கை வெளியானது. அதில், தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டதாகவும், மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்கு பின்னர் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தொண்டர்கள் சற்று நிம்மதியடைந்தனர். அறிக்கையைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு, மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்கு பின்னர் சீராக உள்ளதாக தெரிவித்தார். வதந்திகளை நம்பவேண்டாம் என கூறிய அவர் தொண்டர்கள் கலைந்து செல்லுமாறு கூறினார்.
இதனை தொடர்ந்து இரவு 10.50 மணியளவில் திமுக செயல்தலைவர் மு.க ஸ்டாலின், பொதுச்செயலாளர் க. அன்பழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டனர். மேலும் மு.க அழகிரி, கனிமொழி ஆகியோரும் அங்கிருந்து புறப்பட்டனர். அப்போது , தங்களது தந்தை நலமுடன் இருப்பதாக இருவரும் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
தொடர்ந்து மருத்துவமனை முன்பாக தொண்டர்கள் அதிகம்பேர் காத்திருந்ததால், திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். அதனைத்தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் இருந்த தொண்டர்கள் எண்ணிக்கை பெருமளவில் குறையத்தொடங்கியது. ஆயினும் பலர் இரவு முழுவதும் அங்கேயே தங்கியிருந்தனர். மருத்துவமனை முன்பாக காவல்துறையினர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!