
வான்வெளியில் நேற்று அரிய காட்சியாக, நூற்றாண்டின் மிக நீண்ட நேர சந்திர கிரகணம் இரவில் நிகழ்ந்தது. சரியான நேர்கோட்டில் அமைந்த சந்திரகிரகணம் சுமார் 3 மணி நேரத்திற்க்கு மேல் நீடித்தது.
வானில் ஏற்படும் மாற்றங்கள் ஒவ்வொன்றும் அதிசயமானவை, அப்படி ஒரு அதிசயம் நேற்று நிகழ்ந்தது. ஆம் அது நேற்றைய சந்திரகிரகணம் தான். சூரியன், பூமி, சந்திரன் ஒரே நேர் கோட்டில் வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகின்றது. பொதுவாக சந்திர கிரகணம் சில மணித்துளிகள் நீடித்து பின் படிப்படியாக விலகிவிடும். ஆனால் நேற்றைய முழு சந்திரகிரகணம் மொத்தம் 100 நிமிடங்களுக்கு மேல் நீடித்தது.
சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம் என்பதால் இந்த நூற்றாண்டின் மிக நீளமான சந்திர கிரகணத்தை பலர் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். இந்தியாவில் பல பகுதிகளில் இந்த சந்திர கிரகணம் தோன்றியது. சென்னை பிர்லா கோளரங்கம், அமிர்தசரஸ் பொற்கோவில், ஐதராபாத், டெல்லி, மும்பை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் சந்திர கிரகணத்தை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் சந்திர கிரகணத்தை கண்டு ரசித்தனர்.
மேலும் தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசிய, ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளிலும் இந்நிகழ்வு நடந்தது. இரவு 12 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.40 மணி வரை நிகழ்ந்த சந்திர கிரகணம் இரவு 1 மணி முதல் முழு சந்திர கிரகணம் தோன்றியது. சென்னையில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் மாணவர்கள், பொதுமக்கள் தொலைநோக்கிகள் மூலம் பார்த்து ரசித்தனர்.