Published : 23,Jul 2018 03:47 AM
நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டேன்: ராகுல்காந்தி அதிரடி

கட்சியை பலவீனப்படுத்தும் வகையில் பேசும் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்கப்போவதில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மாற்றியமைக்கப்பட்ட காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை காங்கிரஸ் அறிவித்தது. தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, கட்சிக்குள் பேச அனைவருக்கும் உரிமை உள்ளது எனக் குறிப்பிட்டார். ஆனால் பொதுவெளியில் தலைவர்கள் தவறான தகவல் அளித்தால் அது கட்சியை பலவீனப்படுத்தும் என்ற அவர், அதுபோன்ற தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்கப் போவதில்லை என்றும் கூறினார். ராகுல்காந்தி யார் பெயரை குறிப்பிட்டும் இந்த கருத்தை தெரிவிக்காத போதும் , சசி தரூரை மறைமுகமாக சாடியே அவர் இவ்வாறு பேசியதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சசி தரூர், 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியா ‘ஹிந்து பாகிஸ்தான்’ ஆக மாறிவிடும் என தெரிவித்தார். தற்போதைய அரசியலமைப்பை கிழித்துவிட்டு புதிய ஒன்றை அவர்கள் எழுதிவிடுவார்கள் என்றும் தெரிவித்திருந்தார். சசி தரூரின் இந்த கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியிருந்தனர். இந்நிலையில் சசி தரூரை மறைமுகமாக சாடியே ராகுல்காந்தி இந்த கருத்தை முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது.