
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை என்றும், வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதாகவும் கூறி மத்திய அரசு மீது தெலுங்கு தேசக் கட்சி சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. அதற்கு காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், இடதுசாரிகள் ஆதரவு அளித்தன. நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று காலை முதல் விவாதம் நடைபெற்றது. ஒவ்வொரு உறுப்பினர்களாக பேசி வந்தனர். ராகுல் காந்தி மோடி தலைமையிலான அரசைக் கடுமையாக விமர்சித்து பேசினார்.
15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் மக்களவையில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு இது. இந்தத் தீர்மானத்தின் மூலம் நரேந்திர மோடி அரசைக் கவிழ்க்க முடியாது என்பது எதிர்க்கட்சிகளுக்குத் தெரியும். இருப்பினும், தீர்மானத்தின் மீதான விவாதத்தைப் பயன்படுத்தி அரசின் கொள்கைகளை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.
அதேவேளையில், அரசின் சாதனைகளை பறைசாற்றும் வாய்ப்பாக தீர்மானத்தை பாரதிய ஜனதா பயன்படுத்திக் கொண்டது. ஆளும் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் இதனை சரியாக பயன்படுத்தி எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்குப் பதிலளித்ததோடு, அரசின் சாதனைகளையும் விளக்கினர்.
பின்னர், பிரதமர் மோடி மாலை 6.30 மணிக்கு பேசுவார் என்று கூறப்பட்டது. ஆனால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உட்பட அனைவரும் பேசுவதற்கு நீண்ட நேரம் ஆனது. இதனால், கடைசி உறுப்பினராக பிரதமர் மோடி இரவு 9 மணியளவில் மக்களவையில் பேசினார். தொடக்கத்திலே, ‘இது பாஜகவுக்கான நம்பிக்கை வாக்கெடுப்பு இல்லை; காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக்கான நம்பிக்கை வாக்கெடுப்பு’ என்று சாடினார். பின்னர், சுமார் ஒன்றரை மணி நேரம் மோடி பேசினார்.
மோடி பேசிய பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை கொண்டு வந்த ஆந்திர எம்.பி. ஸ்ரீனிவாஸ் பேசினார். அப்போது, ‘மோடி ஒரு சிறந்த நடிகர். அவர் தனது நடிப்பில் பிளாக்பஸ்டர் படம் ஒட்டினார். நன்றாகவே நடித்தார்’ என்று ஸ்ரீனிவாஸ் கிண்டல் செய்தார். தொடர்ந்து மத்திய அரசு தங்களுக்கு அளித்த வாக்குறுதிகளையும் பட்டியலிட்டார்.
பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. நம்பிக்கை வாக்கெடுப்பு போது, எந்தெந்த பட்டனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று செயலாளர் விளக்கினார். அதில் பச்சை, சிவப்பு மற்றும் மஞ்சள் பட்டன்களை அழுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.
வாக்கெடுப்பில் பங்கெடுத்தவர்கள் - 451
தீர்மானத்தை ஆதரிப்பவர்கள் - 126
தீர்மானத்தை எதிர்ப்பவர்கள் - 325
இதனையடுத்து தெலுங்கு தேசம் கொண்டு வந்த நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு தீர்மானம் தோல்வியில் முடிந்தது. அதிமுக எம்.பிக்கள் தீர்மானைத்தை எதிர்த்து வாக்களித்தனர்.