Published : 20,Jul 2018 04:56 PM
ராகுல் கட்டிப்பிடித்ததை கிண்டல் செய்த மோடி

நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது பேசிய பிரதமர் மோடி, ராகுல் காந்தி கடிப்பிடித்ததை கிண்டல் செய்தார்.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை என்றும் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதாகவும் கூறி மத்திய அரசு மீது தெலுங்கு தேசக் கட்சி சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. அதற்கு காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், இடதுசாரிகள் ஆதரவு அளித்தன. நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று காலை விவாதம் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு உறுப்பினர்களாக பேசி வந்தனர். ராகுல் காந்தி மோடி தலைமையிலான அரசை கடுமையாக விமர்சித்து பேசினார்.
( இதனையும் படியுங்கள்..“தோற்போம் எனத் தெரிந்தே தீர்மானம் கொண்டு வந்தனர்” - மோடி)
பின்னர், பிரதமர் மோடி மாலை 6.30 மணிக்கு பேசுவார் என்று கூறப்பட்டது. ஆனால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உட்பட அனைவரும் பேசுவதற்கு நீண்ட நேரம் ஆனது. இதனால், கடைசி உறுப்பினராக பிரதமர் மோடி இரவு 9 மணியளவில் மக்களவையில் பேசினார். தொடக்கத்திலே, ‘இது பாஜகவுக்கான நம்பிக்கை வாக்கெடுப்பு இல்லை ; காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக்கான நம்பிக்கை வாக்கெடுப்பு’ என்று சாடினார். பின்னர், ராகுல் காந்தி உள்ளிட்டோர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதிலளித்தார். அப்போது, ராகுல் காந்தி கட்டிப்பிடித்ததை நகைச்சுவையாக விமர்சித்தார்.
மோடியின் கடுமையான விமர்சனத்திற்கு எதிர்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். "We want justice" என்று உரக்கமாக அவர்கள் குரல் எழுப்பினர். எதிர்ப்புகளுக்கு நடுவே பிரதமர் மோடி தொடர்ந்து பேசினார்.
மோடி தனது பேச்சின் போது, ராகுல் காந்தி கட்டிப்பிடித்ததை எல்லோரும் சிரிக்கும் படி கிண்டல் செய்தார். ‘ஒரு உறுப்பினர் என்னிடம் ஓடி வந்து விலகுங்கள்.. விலகுங்கள் என்றார். அதற்குள் ஆட்சிக்கு வர என்ன அவசரம்? மக்கள் எங்களை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஜனநாயகத்தில் மக்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். சிலர் அரசு கருவூலத்தை பெற அவசரப்படுகிறார்கள். அதற்கு என்ன அவசரம்?’ என்றார் மோடி. அதேபோல், ராகுல் காந்தி கண்ணடித்ததை நாடே பார்த்தது என்று மோடி கூறினார்.