Published : 20,Jul 2018 10:52 AM
கண் அடித்த ராகுல் - களைகட்டிய நாடாளுமன்றம்

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்துள்ளது. தீர்மானம் மீது ஒவ்வொரு எம்.பி.க்களாக தங்களது கருத்தை பதிவு செய்து வருகின்றனர். விவாதத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசிய போது பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகள் அரங்கேறின.
உங்களைப் போல் வெறுப்பை கொட்டமாட்டேன் - ராகுல்
ராகுல் காந்தி தனது பேச்சின் போது பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசினை கடுமையாக விமர்சித்து தள்ளினார். உணர்ச்சிப்பூர்வமாக, கோபமாக ராகுல் பேசினார். “நாட்டு மக்களின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் போடுவேன் என்றார் பிரதமர். 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தருவேன் என்றார் பிரதமர். ஆனால் அத்தனையும் பொய்யுரைகளாகிவிட்டன. காங்கிரஸ்தான் ஜிஎஸ்டியை எடுத்து வந்தது. அப்போது அதனை பாஜக எதிர்த்தது. நாங்கள் கொண்டு வந்தது நாடு முழுவது ஒரே ஜிஎஸ்டி. ஆனால் பிரதமர் மோதி கொண்டுவந்தது ஐந்து விதமான ஜிஎஸ்டி. நாங்கள் பொட்ரோலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர வேண்டும் என்றோம். பிரதமர் பல நாடுகளுக்கு செல்கிறார். பல நாட்டுத் தலைவர்களை சந்திக்கிறார். ஆகவே பணக்கார முதலாளிகள் பற்றிதான் அவரது மனம் சிந்திக்கிறது. பொட்டிக்கடை வைத்திருப்பவர்கள், சிறுசிறு தொழில்களை செய்பவர்களை பற்றி அவர் சிந்திப்பதே இல்லை.
நீங்கள் பொய் சொல்லுங்கள்.. திட்டுங்கள்.. லத்தியால்கூட அடியுங்கள்..ஆனால் மக்கள் குறித்து மனத்தில் அன்பு இருக்க வேண்டும். எனக்குள் நீங்கள் நுழைந்திருக்கிறீர்கள். உங்களால் நான் பப்புவாக இருக்கிறேன். நீங்கள் எவ்வளவு திட்டினாலும் எனக்கு ஒருதுளி வெறுப்போ, கோபமோ இல்லை. நான் காங்கிரஸ்காரன். என் தந்தை இந்தத் தேசத்தின் மக்கள் மனத்தில் இருக்கிறார். நான் அவர்களிடம் இருந்து என் தந்தையின் உணர்வை, காங்கிரஸ் உணர்வை வெளியே கொண்டு வருவேன். அவர்கள் மனதிற்குள் இருக்கும் காங்கிரஸ் அன்பை வெளிப்படுத்த செய்வேன். எல்லோருரையும் காங்கிரஸ்காரனாக மாற்றுவேன்.” எனக் கூறிய பேச்சை முடித்த ராகுல், உடன் விறுவிறுவென்று மோடியின் இடத்திற்கு சென்று அவரை கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்தினார்.
மோடியும், கட்டியணைத்துவிட்டு திரும்பி சென்ற ராகுலை அழைத்து கை கொடுத்து தட்டிக் கொடுத்தார். இந்த நிகழ்வுகளை யாருமே அந்த நேரத்தில் எதிர்பார்க்கவில்லை. அதோடு இது நிற்கவில்லை, தன்னுடைய இடத்தில் வந்து அமர்ந்த ராகுல் சற்று திரும்பி மோடி பார்த்து கண் அடித்தார்.
(இதனையும் படிக்க.. கட்டி அணைத்த ராகுல்: தட்டிக் கொடுத்த மோடி..! )
இதனையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி மாலை 6 மணியளவில் விவாதங்களில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கவுள்ளார்.