Published : 20,Jul 2018 08:51 AM
கட்டி அணைத்த ராகுல்: தட்டிக் கொடுத்த மோடி..!

மக்களவையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பேச்சின் நிறைவில் பிரதமர் மோடியை கட்டியணைத்தார்.
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானம் மீது எம்.பி.க்கள் பலரும் தங்களது கருத்தை பதிவு செய்தனர். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மிகக் கடுமையாக மத்திய அரசையும் பிரதமர் மோடியையும் விமர்சித்து பேசினார். இதனால் பாஜக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். எனவே மக்களவையை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் சிறிது நேரம் ஒத்திவைத்தார்.
தொடர்ந்து அவை கூடியபோதும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். ஆனால் பிரதமர் மோடி கவனமாக ராகுல்காந்தியின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தார். தனது பேச்சை நிறைவு செய்யும் நேரத்தில், பிரதமர் மோடியின் இருக்கை நோக்கி வேகமாக விரைந்த ராகுல்காந்தி அவரை கட்டி அணைத்தார். அதற்கு பதிலாக பிரதமர் மோடி ராகுல்காந்தியை சிரித்தபடி தட்டிக் கொடுத்து கைகளை குலுக்கி வாழ்த்து தெரிவித்தார். இதனால் அவையில் இருந்த எம்.பி.க்கள் அனைவரும் சில நிமிடம் அமைதியாகினர். சபாநாயகர் சுமித்ரா மகாஜன் சிரித்தப்படியே இந்த நிகழ்வை கவனித்துக் கொண்டிருந்தார்.