Published : 19,Jul 2018 04:07 PM
அப்பட்டமான தீண்டாமை கொடுமை! - ஸ்டாலின் காட்டம்

திருப்பூர் மாவட்டத்தில், அரசுப் பள்ளியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் சமையல் செய்யக்கூடாது எனக் கூறி பள்ளியைத் திறக்க விடாமல் போராட்டம் நடத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. போராட்டம் காரணமாக அந்தப் பெண் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த திருமலைக்கவுண்டன் பாளையம் கிராமத்தில் அரசுப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பாப்பம்மாள் என்ற பெண் சத்துணவுக் கூடத்தின் சமையல் பனியாளராக வேலை செய்துவந்தார். ஆனால் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பாப்பம்மாள் சமைத்ததை தங்கள் பிள்ளைகள் சாப்பிடகூடாது என்று அந்த ஊரைச் சேர்ந்த ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாப்பம்மாளை வேலையிலிருந்து நீக்குங்கள் இல்லையெனில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என அவர்கள் கூறியுள்ளதாக தெரிகிறது. அதோடு நிற்காமல், பள்ளியைத் திறக்கவிடாமல் பூட்டுப் போட்டனர். பின்னர் முற்றுகை போராட்டத்திலும் ஈடுபட்டனர். இப்படியே அவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தியதால், பாப்பம்மாள் வேறு இடத்திற்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “சமூகநீதியின் விளைநிலமான தமிழ்நாட்டில், அரசுப் பள்ளியின் சமையலர் தாழ்த்தப்பட்ட சமூதாயம் என்பதால், சாதி வெறியினரின் தூண்டுலால் அவரை வேறு பள்ளிக்கு இடமாறுதல் செய்திருப்பது அப்பட்டமான தீண்டாமை கொடுமை! தமிழக அரசு பாப்பம்மாளை அதே பள்ளிக்கு உடனடியாக இடமாற்றம் செய்து உத்தரவிட வேண்டும்!” என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், பணியிட மாற்றம் செய்யப்பட்ட பாப்பம்மாள் மீண்டும் அதே பள்ளிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.