Published : 17,Jul 2018 01:05 PM

“சென்னை சிறுமி வீட்டைச் சுற்றி போலீஸ் குவிப்பு; மாதர் சங்கம் போராட்டம்”

Chennai-Ayanavaram-Child-Harassment---A-Ground-Reality-report

7ஆம் வகுப்பு பயிலும் சிறுமி 17 பேரால் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண் ஒருவர் நேற்று, அயனாவரம் டபிள்யூ.6 அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதை படித்துப் பார்த்த காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதில் தனது 11 வயது மகளை அடுக்குமாடி குடியிருப்பு ஊழியர்கள் கடந்த 7 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக குற்றம்சாட்டியிருந்தார். தங்கள் மகளை வயிற்று வலிக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது அவளுக்கு நேர்ந்த கொடுமை தெரியவந்ததாக சிறுமியின் தாயார் கண்ணீருடன் புகார் அளித்திருந்தார். அவரது புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திய போது தான் அடுத்தடுத்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமிக்கு செவித்திறன் குறைபாடு உள்ளது. சிறுமி வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. 

ஃபோகஸ், யுகே ஃபெசிலிடி சர்வீஸ் (FOCUS, UK FACILITY SERVICES) எனும் தனியார் நிறுவனங்கள் மூலம், ஒப்பந்த அடிப்படையில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் பணியாற்றி வருகின்றனர். சிறுமி தினமும் பள்ளி செல்வதற்காக அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள லிப்ட்டை பயன்படுத்துவது வழக்கம். அதன் மூலம் லிப்ட் ஆப்ரேட்டர்கள் சிறுமிக்கு அறிமுகம் ஆகியுள்ளனர். இதைப் பயன்படுத்திக் கொண்டு 66 வயதான லிப்ட் ஆபரேட்டர் ரவிக்குமார் என்பவர் தனது பேத்தி வயதுள்ள சிறுமியை மேலும் சிலருடன் கூட்டு சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அவர்கள் அடுக்குமாடி குடியிருப்பில் காலியாக உள்ள வீடுகள், தரைத்தளம், உடற்பயிற்சி மையம், மொட்டை மாடி போன்ற ஆளில்லா இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அத்துடன் மயக்க ஊசி செலுத்தியும், குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்தும் சிறுமியை வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. 

கடந்த ஏழு மாதங்களாக தமது மகள் இத்தகையை கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக அவரது தாயர் அளித்துள்ள புகாரில் கூறப்பட்டு இருக்கிறது. ரவிக்குமார் உள்ளிட்ட சிலர் செல்போனில் சிறுமியை ஆபாசமாக படமெடுத்தும், கத்தியை காட்டி மிரட்டியும் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியிடம் மகிளா நீதிமன்ற நீதிபதி விசாரணை நடத்தினார். அவரிடம் சிறுமி வாக்குமூலம் அளித்தார். அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கைப்பற்றப்பட்ட காலி சிரிஞ்சுகள், காலி குளிர்பான பாட்டி‌ல்கள் உள்ளி‌ட்ட தடயங்கள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் சிறுமியை கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. சிறுமி கழுத்தில் கத்தியால் கீறிய காயம் இருந்ததாக அவரது தாய் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தக் கொடூரக் குற்றம் தொடர்பாக போக்சோ சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புகாரின் அடிப்படையில், அடுக்குமாடி குடியிருப்பில் லிப்ட் ஆபரேட்டராக பணியாற்றி வந்த ரவிக்குமார், காவலாளிகள் அபிஷேக், சுகுமாரன், பிரகாஷ், பிளம்பர் சுரேஷ் மற்றும் வீட்டு வேலைக்காரர் ராஜசேகர் ஆகியோரை சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக கைது செய்துள்ளனர். அவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக காவலாளிகள் முருகேஷ், பழனி, லிப்ட் ஆபரேட்டர்கள் பரமசிவம், பாபு, தீனதயாளன், பிளம்பர்கள் ஜெய்கணேஷ், ராஜா, சூர்யா, எலக்ட்ரீஷியன்கள் ஜெயராமன், உமாபதி மற்றும் தோட்ட வேலை செய்யும் குணசேகர் ஆகிய 11 பேரையும் கைது செய்துள்ளனர். மொத்தம் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 8 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கைது செய்யப்பட்ட 17 பேரும் சென்னை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை ஜூலை 31ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி மஞ்சுளா உத்தரவிட்டார். இதையடுத்து அவர்களை சிறைக்கு அழைத்துச்செல்லும் போது, நீதிமன்றத்தில் இருந்த வழக்கறிஞர்கள் சிலர் 17 பேர் மீதும் தாக்குதல் நடத்தினர். 

இந்தச் சம்பவம் தொடர்பாக ஒரு ஆய்வு மேற்கொள்ள, புதிய தலைமுறை இணையதளம் சார்பில் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றோம். அங்கு பத்திரிகையாளர்கள் உள்ளே வரவேண்டாம் என, குடியிருப்பு வாசிகள் கேட்டுக்கொண்டனர். சம்பவம் நடைபெற்றதையொட்டி, அங்கு காவல்துறையினர் குவிந்திருந்தனர். வெளியாட்கள் யாரையும் குடியிருப்புக்குள் அனுமதிக்காமல் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மற்ற குடும்பத்தினர் எல்லோரும், ஆத்திரம் கலந்த பதட்டத்துடன் இருந்தனர். அங்கே இருக்கும் ஒரு பெண்ணிடம் கேட்டபோது, “தகவல்களை இப்போது தர இயலாது. இங்கு ஒரு அமைதியற்ற சூழல் இருக்கிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் கண்டிப்பாக அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். குற்றம் நடந்த வேறு பிளாக்கில், நாங்கள் வசிப்பது வேறுபிளாக்கில்” என்றார். அவரைத் தொடர்ந்து அங்கு 3 வருடமாக பணிபுரிந்து வரும் ஒரு காவலாளியிடம் சம்பவம் தொடர்பாக கேட்டபோது, “சம்பவம் நடந்தது தொடர்பாக எனக்கு சரியாக தெரியவில்லை. நேற்று காவல்துறையினர் வந்து சிலரை விசாரணைக்கு அழைத்துச் செல்லும் போது தான் எனக்கே விஷயம் தெரியும். இத்தனை நாட்களாக இங்கு பணியாற்றி வருகிறேன். இதுவரை என்னிடம் சிரித்து பேசிப்பழகியவர்கள் எல்லாம், இப்போது என்னை ஒரு குற்றவாளி போல பார்க்கின்றனர். சிலர் செய்த தவறு, இங்கிருக்கும் மொத்த ஊழியர்களுக்கும் களங்கம் ஏற்படுத்திவிட்டது. குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். நான் இன்று பணிபுரியும் சூழல் இங்கு இல்லை. அதனால் வீட்டுக்குச் செல்கிறேன்” எனக் கூறிவிட்டு புறப்பட்டார். 

இதற்கிடையே அடுக்குமாடி குடியிருப்பின் வாயிலுக்கு முன்னதாக, மகளிர் அமைப்பினர் சிலர் கூடி முழக்கம் எழுப்ப முயன்றனர். அவர்களை அங்கிருந்த காவலர்கள் சமரசம் பேசி, அமைதிப்படுத்தினர். அவர்கள் அடுக்குமாடி குடியிருப்பில் பணிபுரியும் ஊழியர்கள் எதிராகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆதரவாகவும் பேசினர். அப்போது காவல்துறையினருக்கும், மகளிர் அமைப்பினருக்கும் இடையே வாதம் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தகவல்களை சேகரிக்கலாம் என, அயனாவரம் காவல்நிலையம் சென்றோம். அங்கு நாம் செல்லும்போது மாநில குழந்தைகள் நல வாரியத்தினர், வருகை தந்திருந்தனர். அவர்களுடன் காவல் ஆய்வாளர் மீட்டிங்கில் இருந்தார். அதனால் அவருடன் பேசமுடியவில்லை. 

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்