Published : 17,Jul 2018 03:01 AM

மாற்றுத்திறன் சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை ! 17 பேர் அதிரடி கைது

11-year-old-Girl-sexual-harassment-in-Chennai-Apartment-17-people-arrested

மாற்றுத்திறன் சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை ! 17 பேர் அதிரடி கைதுசென்னையில் காது கேளாத 11 வயது சிறுமியை ‌மிரட்டி, 7 மாதங்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில், 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்துவரும் பெண் ஒருவர், காவல்நிலையத்தில் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் தான் வசித்து வரும் குடியிருப்பில் பணிபுரியும் 15க்கும் மேற்பட்ட ஊழியர்கள், தனது ஏழாம் வகுப்பு பயிலும் மகளை மிரட்டி 7 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக தெரிவித்துள்ளது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் அந்த குடியிருப்பில் FOCUS, UK FACILITY SERVICES எனும் தனியார் நிறுவனங்கள் மூலம், ஒப்பந்த அடிப்படையில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். 

அதில் 66 வயதான ரவிக்குமார் என்ற லிஃப்ட் ஆப்ரேட்டர், அங்குள்ளவர்களை கூட்டு சேர்த்துக் கொண்டு தனது மகளை கடந்த ஜனவரி மாதம் முதல் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி வந்ததாக குற்றஞ்சாட்டியுள்ளார் அந்த பெண்‌. அடுக்குமாடி குடியிருப்பில் காலியாக உள்ள வீடுகள், தரைத்தளம், உடற்பயிற்சி மையம், மொட்டை மாடி போன்ற ஆளில்லா இடங்களுக்கு அழைத்துச் சென்று, மயக்க ஊசி செலுத்தியும், குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்தும் சிறுமியை வன்கொடுமை செய்துள்ளதாக அவர் அடுக்கும் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன. 

செல்ஃபோனில் சிறுமியை ஆபசமாக படம் எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டிய அந்த நபர்கள், கத்தி முனையில் தொடர்ந்து பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதாக அவரது தாய் கூறும் குற்றச்சாட்டுகள் ‌‌வன்மத்தின் உச்சம். வயிற்று வலி காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறுமியை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவருக்கு நேர்ந்த கொடூர சம்பவம் குறித்து பெற்றோருக்கு தெரியவர‌, அவர்கள் பேரதிர்ச்சியில் ஆழ்ந்தனர். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக 25க்கும் மேற்பட்டோர் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டனர். பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரித்த காவலர்கள், அவரை மகிளா நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தினர்.

பாலியல் வன்கொடுமை தொடர்பாக, சிறுமியிடம் வாக்குமூலமும் பெறப்பட்டுள்ளது. சிறுமி அடையாளம் காட்டியதன் அடிப்படையில், அடுக்குமாடி குடியிருப்பில் பணிபுரியும் லிஃப்ட் ஆப்ரேட்டர் ரவிக்குமார், ப்ளம்பர் சுரேஷ், காவலாளிகள் சுகுமாறன், அபிஷேக், இறால் பிரகாஷ், ஒரு உதவியாளர் உள்பட 6 பேர் மீது போக்ஸோ சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்த காவலர்கள், அவர்களை கைது செய்துள்ளனர். 

அதில் தொடர்புடையதாக 18 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து காலி சிரெஞ்சுகள், காலி குளிர்பான பாட்டி‌ல்கள் உள்ளி‌ட்ட தடயங்களைக் கைப்பற்றி, அவற்றை ஆய்வுக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமி வீட்டில் இல்லாத நேரங்களில் அவள் எங்கு செல்கிறாள் என பெற்றோர் கவனிக்காததே இந்த கொடுஞ்செயல் தொடர்ந்து நடந்ததற்கு காரணமாக‌ இருக்கலாம் என காவலர்கள் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்