[X] Close

ரன் அடிச்சா ‘தல’, இல்லையென்றால் விமர்சனம்.. - கொந்தளித்த கோலி

India-vs-England--Virat-Kohli-Comes-To-MS-Dhoni-s-Rescue-After-Lord-s-Grind

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 86 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 236 ரன்களுக்கே ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் யாரும் அரைசதம் கூட அடிக்கவில்லை. இந்திய அணி சார்பில் அதிகப்பட்சமாக சுரேஷ் ரெய்னா 46 ரன்களும், விராட் கோலி 45 ரன்களும் எடுத்திருந்தனர். இதன்மூலம் 3 ஒருநாள் போட்டி கொண்ட கிரிக்கெட் தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன. கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி 17-ந் தேதி நடைபெற உள்ளது.

இந்தப் போட்டியில் தோனி 59 பந்துகளை சந்தித்து 37 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். தோனி பொதுவாகவே பெஸ்ட் பினிஷர் என பெயரெடுத்தவர். ஆனால் நேற்றையப் போட்டியில் அவர் மிகவும் பொறுமையாக ஆடினார். இது தோனியின் வழக்கமான பேட்டிங் இல்லை என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். லார்ட்ஸில் தோனியின் பொறுமையான ஆட்டத்தை பார்த்த இங்கிலாந்து ரசிகர்கள் "ஊஊஊஊஊஊஊ" என சத்தமிட்டு தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். 


Advertisement

இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்திருந்த போது தோனி களமிறங்கினார். அப்போது, 23 ஓவர்களில் 183 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. இதுபோன்ற பல இக்கட்டான தருணங்களில் தோனி பல முறை பொறுப்புடன் விளையாடி இந்திய அணிக்கு வெற்றியை தேடித் தந்துள்ளார். இதற்கு 2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டி ஒரு எடுத்துக் காட்டாகும். ஆனால், இந்தப் போட்டியில் 59 பந்துகளை சந்தித்து வெறும் 37 ரன்கள் மட்டுமே அடித்தார்.

சமூக வலைதளங்களில் மட்டுமல்லாமல், பலரும் தோனியின் ஆட்டம் குறித்து விமர்சனங்களை முன் வைத்துள்ளனர். தோனி 10 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கலை நேற்று எட்டிய போதும், அதனையெல்லாம் விடுத்து ஏராளமானோர் அவரை வைத்து ட்ரோல் செய்து குவித்தனர்.

                    

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் கூறுகையில், ‘இன்று நிச்சயம் நாம் பார்த்தது வழக்கத்திற்கு மாறான வித்தியாசமான தோனி. வழக்கமாக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள சிறிது நேரம் எடுத்துக் கொள்வார். சில பந்துகளை சந்தித்த பிறகு பவுண்டரிகளை அடிக்க முயற்சிப்பார். ஆனால், இன்று அவருக்கு துணையாக யாரும் நீடிக்கவில்லை. இருப்பினும், அவர் நிறைய பந்துகளை சந்தித்தார்’ என்றார்.

சிலர் நேரடியாக விமர்சனங்களை முன் வைக்காமல், தோனிக்கு கூடுதல் பொறுப்பு உள்ளது, அவர் சற்றேனும் அடித்திருக்க வேண்டும் என்று சூசகமாக விமர்சிக்கின்றனர். இந்நிலையில் தான், தோனிக்கு ஆதரவாக கேப்டன் விராட் கோலி களமிறங்கினார். 

             

விராட் கோலி கூறுகையில், “தன்னுடைய வழக்கமான பாணியில் தோனி விளையாட முடியாமல் போகும் போதெல்லாம் இப்படியொரு விமர்சனம் எழுகிறது. சிறப்பாக விளையாடி வெற்றி பெற வைக்கும் பொழுது, அவரை சிறந்த பினிஷர் என்று போற்றி புகழ்கிறார்கள். அதேபோல், சிறப்பாக விளையாட முடியாத தருணங்களில் எல்லோரும் அவரை மட்டுமே குறி வைத்து தூற்றுகிறார்கள். விமர்சனம் செய்பவர்கள் இப்படி உடனடியாக ஒரு முடிவுக்கு வருவது துரதிருஷ்டவசமானது. 

கிரிக்கெட்டில் எல்லோருக்கும் மோசமான நாட்கள் வரும். இன்று(நேற்று) ஒவ்வொருவருக்கும் மோசமான நாள். அவருக்கு மட்டுமல்ல. ஒரு இன்னிங்சை மிகவும் ஆழமாக கவனிக்க வேண்டும். 160-170 ரன்னிற்குள் ஆட்டமிழக்க விரும்பக் கூடாது. அவர் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர். சில நாட்கள் அது வெளிப்படாமல் இருக்கலாம். மற்றவர்கள் அவர் மீது பழிபோடும் முடிவுக்கு வரலாம். ஆனால், நாங்கள் அப்படி செய்ய மாட்டோம். அவர் மீது எங்களுக்கு முழுமையாக நம்பிக்கை உள்ளது.

முதலில் எங்களுக்கு பேட்டிங் நன்றாக தான் சென்று கொண்டிருந்தது. ஆனால் எங்களுக்கு விக்கெட்டுகளும் முன்னதாக சரியத் தொடங்கிவிட்டன. இது இந்திய அணிக்கு ஒரு பின்னடைவுதான். விக்கெட்டுகள் முன்னதாவே வீழும் போது மீண்டு வருவது கொஞ்சம் கஷ்டம்தான்.” என்றார்.

முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெக்ரா கூறுகையில், “7 ஓவர்களில் 80 ரன் அடிக்க வேண்டியிருந்து ஹர்திக் பாண்ட்யாவும் களத்தில் இருந்திருந்தால், தோனி நிச்சயம் ஷாட்கள் அடித்திருப்பார். ஆனால், 120 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டியிருந்த நிலையில், பாண்ட்யாவும் ஆட்டமிழந்துவிட்டார். அவருக்கு தெரியும் நிச்சயம் சேஸ் செய்ய முடியாது என்று. ஒரு வீரரை ஒரே ஒரு போட்டியில் இருந்து மட்டும் நம்மால் கணிக்க முடியாது” என்றார்.

      

இந்த இடத்தில் தான், தோனி 5வது அல்லது அதற்கு கீழான இடத்தில் இந்திய அணிக்காக களமிறங்கி 76.80 ரன் ரேட் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close