Published : 14,Jul 2018 02:47 AM
ட்விட்டர் அதிரடி; பிரபலங்களை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை சரிவு

செயல்படாத மற்றும் தடை செய்யப்பட்ட கணக்குகளை நீக்கும் ட்விட்டரின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை பின் தொடர்வோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.
ட்விட்டரில் பிரபலங்களை பின் தொடர்வோரின் எண்ணிக்கைகளை நாள்தோறும் கண்காணித்து வரும் சோஷியல்பிளேடு டாட் காம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி பிரதமர் மோடியை ட்விட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 34 லட்சத்தில் இருந்து 4 கோடியே 31 லட்சமாகக் குறைந்துள்ளது. அதாவது 3லட்சம் பேர் குறைந்துள்ளனர். பிரதமரின் தனிப்பட்ட ட்விட்டர் பக்கத்தைப் பின் தொடர்ந்தவர்களில் இரண்டு லட்சத்து 84ஆயிரத்து 746 கணக்குகளும், அலுவல் ரீதியான ட்விட்டர் பக்கத்தைப் பின் தொடர்ந்தவர்களில் ஒரு லட்சத்து 40ஆயிரத்து 635 கணக்குகளும் குறைந்துள்ளன.
இதே போல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தன்னைப் பின் தொடர்பவர்களில் இருந்து 17ஆயிரத்து 500 பேரை இழந்துள்ளார். ஆனால் தற்போது வெளியாகியுள்ள புள்ளி விவரங்கள் குறித்து ட்விட்டர் அதிகாரப்பூர்வமாக எதனையும் தெரிவிக்கவில்லை. சந்தேகத்திற்கிடமான கணக்குகளை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையில் இருந்து நீக்கப் போவதாக ட்விட்டர் கடந்த வாரத்தில் அறிவித்திருந்தது.