
பீகாரில் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தன. 80 இடங்களை பிடித்து ராஷ்ட்ரிய ஜனதா தளம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், நிதிஷ்குமார் முதலமைச்சர் ஆக லாலு பிரசாத் ஒப்புக் கொண்டார். அதன்படி இந்தக் கூட்டணி ஆட்சி இரண்டு ஆண்டுகள் சுமூகமாக சென்றது. அதன்பிறகு ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் வெளியேறினார். பின்னர், பாஜகவுடன் இணைந்து நிதிஷ் ஆட்சி அமைத்தார்.
கடந்த ஓராண்டாக நிதிஷ்குமார் - பாஜக கூட்டணி சுமூகமாக சென்று கொண்டிருக்கிறது. இருப்பினும் சமீபகாலமாக இந்தக் கூட்டணியில் பூசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மே மாதம் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிதிஷ்குமார், பணமதிப்பிழப்பு விவகாரத்தை வெளிப்படையாக விமர்சித்தார். “நான் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் ஆதரவாளர் தான். ஆனால், அதன்மூலம் எத்தனை பேர் பயனடைந்தார்கள்? சில பெரிய மனிதர்கள் தங்கள் பணத்தை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றிக்கொண்டனர்” என்று காட்டமாக பேசினார். நிதிஷ்குமாரின் இந்தப் பேச்சு கூட்டணியில் உள்ள விரிசலை வெளிப்படுத்தும் வகையில் இருந்தது.
அதேபோல், நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பான விவகாரத்தில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கட்சிகளிடையே கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், இருக்கட்சிகளும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்குமா என்பதில் கேள்வி எழுந்தது. இருப்பினும், “நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனதா தளமும், பாஜகவும் இணைந்து போட்டியிடும். தொகுதி பங்கீடு குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் சஞ்சய் குமார் கூறினார்.
இதனிடையே, நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்தில்கொண்டு பாஜக தலைவர் அமித்ஷா பல்வேறு மாநிலங்களுக்கும் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். அந்த வகையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான பயணத்தின் அடுத்த கட்டமாக இன்று பீகார் தலைநகர் பாட்னா சென்றுள்ளார். பாட்னாவில் அரசு விருந்தினர் மாளிகையில் நிதிஷ்குமாரை அமித்ஷா இன்று காலை சந்தித்தார். தலைநகர் பாட்னாவில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது பீகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி உடனிருந்தார். இந்த சந்திப்பின் போது தொகுதி பங்கீடு குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது அமித்ஷா உள்ளிட்டோர் காலை உணவு சாப்பிட்டனர். இதனையடுத்து, இன்று இரண்டு பீகார் மாநில முதலமைச்சர் இல்லத்தில் நிதிஷ்குமார் உடன் அமித்ஷா இரவு உணவு எடுத்துக்கொள்கிறார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் அமித்ஷா தற்போது தான் முதன் முறையாக பாட்னா சென்றுள்ளார். பாட்னா வந்த அமித்ஷாவிற்கு அம்மாநில பாஜவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பீகார் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 31 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. அதேபோல், 2019 தேர்தலிலும் மாபெரும் வெற்றி பெறும் முனைப்பில் அமித்ஷா இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். அதற்காக பீகார் மாநில பாஜக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து அவர் ஆலோசனை நடத்துகிறார். தேர்தலுக்கான திட்டம் குறித்தும் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கவுள்ளார்.