[X] Close

‘என்னை பைத்தியக்காரன் என நினைக்கிறீர்களா?’ தோனியின் கோபம் குறித்து சிலிர்க்கும் குல்தீப்

When-MS-Dhoni-Lost-His-Cool-With-Kuldeep-Yadav

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி எல்லோராலும் கேப்டன் கூல் என்று அன்போடு அழைக்கப்படுபவர். நீண்ட நாட்களாக தனது கேப்டன் பொறுப்பில் அவர் நடந்து கொண்ட விதத்திற்காகவே அவர் இவ்வாறு அறியப்படுகிறார். வெற்றி, தோல்வி என இரண்டு தருணங்களிலும் அலட்டிக் கொள்ளாத தோனி பண்புக்கு அத்தனை ரசிகர்கள் உள்ளார்கள். ஆனாலும், அங்கொன்றும் இங்கொன்றுமாக சில தருணங்களில் மட்டும் அவரது கோப முகத்தை வெளிக்காட்டுவார். 


Advertisement

     

அப்படியான ஒரு தருணத்தை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் பகிர்ந்து கொண்டுள்ளார். குல்தீப் யாதவும், சாஹலும் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளனர். கடந்த ஆண்டு இந்தூர் நகரில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் தோனியின் கோபத்தை பார்த்ததாக குல் தீப் சிலிர்ப்புடன் கூறினார்.


Advertisement

குல்தீப் கூறுகையில், “நான் போடும் பந்துகளையெல்லாம் பேட்ஸ்மேன்கள் சிக்ஸர்கள் விளாசினர். மைதானம் மிகவும் சிறியது. ஒவ்வொரு முறை சிக்ஸர் பறக்கும் போதும், நான் தோனியை பார்ப்பேன். இது சரியில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பார்.

நான் வீசிய 4வது ஓவரில் பேட்ஸ்மேன் ரிவர்ஸ் சுவீப் ஷாட் மூலம் பவுண்டரி அடித்தார். தோனி எனது அருகில் வந்தார். கவர் பகுதியில் உள்ள வீரரை எடுத்துவிட்டு டீப் பகுதியில் போடு. அப்போது, வேண்டாம் தோனி இப்போது இருக்கும் பீல்டிங் செட் அப்பே போதும் என்று கூறினேன். இதனை கேட்டதும் தோனி கோபம் அடைந்து விட்டார். ‘என்னை பைத்தியக்காரன் என்று நினைக்கிறீர்கள். 300 ஒருநாள் போட்டியில் விளையாடி இருக்கிறேன்’ என்று கூறினார். அவ்வளவு தான் நான் அதிர்ந்து போனேன்.


Advertisement

தோனி பீல்டிங் மாற்றம் செய்த பின்னர் ஒரு விக்கெட் வீழ்ந்தது. பின்னர், என்னிடம் வந்து இதற்காகத்தான் அப்படி கூறினேன் என்றார் தோனி” என்றார். 

                      

அந்தப் போட்டி குறித்து சாஹல் கூறுகையில், ‘ஸ்பின்னர்களின் பணியில் பாதியை தோனி எடுத்துக் கொள்கிறார்கள். பேட்ஸ்மேன்களின் மனநிலை குறித்த  அவரது துல்லியமான கணிப்பு எங்களுக்கு அவ்வளவு உதவியாக இருந்தது’ என்றார். 

அந்தப் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 52 ரன் விட்டுக் கொடுத்து குல்தீப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சாஹல் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் ரோகித் சர்மா 35 பந்துகளில் சதம் விளாசினார்.

                     


Advertisement

Advertisement
[X] Close