Published : 11,Jul 2018 06:03 AM
'பேரறிவாளனை விடுவிப்பதில் ஆட்சேபம் இல்லை' ராகுல் தெரிவித்ததாக ரஞ்சித் தகவல் !

பேரறிவாளனை விடுவிப்பதில் தங்களது குடும்பத்திற்கு ஆட்சேபம் இல்லை என ராகுல் காந்தி தன்னிடம் தெரிவித்ததாக இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவரான ராகுல் காந்தியை தமிழ் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் சந்தித்து பேசியுள்ளார். இந்தச் சந்திப்பு டெல்லியில் உள்ள ராகுல் காந்தி இல்லத்தில் நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. இந்தச் சந்திப்பின்போது பா.ரஞ்சித்துடன், நடிகர் கலையரசனும் சென்று ராகுல் காந்தியுடன் புகைப்படம் எடுத்துள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி இன்று பகிர்ந்தார்.
இந்தச் சந்திப்பு குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தது " திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தை சந்தித்தேன். தமிழில் பிளாக்பஸ்டர் திரைப்படங்களான மெட்ராஸ், கபாலி, காலாவை இயக்கியவர். உடன் நடிகர் கலையரசனையும் நேற்று சந்தித்தேன். நாங்கள் அரசியல், திரைப்படங்கள், சமுதாயம் பற்றி பேசினோம். இந்தச் சந்திப்பும் உரையாடலும் மகிழ்ச்சியளிக்கிறது, இதுபோன்ற பேச்சுகள் தொடரும் என எதிர்பார்க்கிறேன்" என கூறியுள்ளார்.
இந்நிலையில் ராகுல் காந்தி தன்னிடம் "ராஜீவ் காந்தி கொலை குற்றவாளியான பேரறிவாளனை விடுவிப்பதில் தங்கள் குடும்பத்துக்கு ஆட்சேபம் இல்லை" என தெரிவித்தாக பா.ரஞ்சித் கூறியுள்ளார்.