[X] Close

இன்று கடைசி டி20: தொடரை கைப்பற்றுமா இந்தியா?

Early-bragging-rights-up-for-grabs-for-England-or-India-in-T20-decider

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடக்கிறது. 


Advertisement

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது, இந்திய கிரிக்கெட் அணி. இரு அணிகளுக்கு இடையிலான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி, மான்செஸ்டரில் நடைபெற்றது. இதில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்களை எடுத்தது. இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் தனது மாயச் சுழலை பயன்படுத்தி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் களமிறங்கிய இந்திய அணி, லோகேஷ் ராகுலின் அதிரடி சதத்தால் அபார வெற்றி பெற்றது.


Advertisement

இரு அணிகளுக்கு இடையிலான 2 வது போட்டி கார்டிப்பில் நடந்தது. முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. கேப்டன் விராத் கோலி 47 ரன்களும் தோனி 32 ரன்களும் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அலெக்ஸ் ஹேல்ஸ் 58 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார்.

முதல் போட்டியில் 5 விக்கெட்டுகளை அள்ளிய இந்திய அணியின் மேஜிக் சுழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ், கடந்த போட்டியில் விக்கெட் வீழ்த்தவில்லை. அவரது பந்துவீச்சை எதிர்கொள்ள மெர்லின் பந்துவீச்சு மெஷின் மூலம் இங்கிலாந்து வீரர்கள் பயிற்சி பெற்றனர். அது அவர்களுக்கு கைகொடுத்தது. இந்நிலையில் தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி பிரிஸ்டலில் இன்று நடக்கிறது. 

இந்திய அணியில் பும்ரா இல்லாத குறை தெரிகிறது. பேட்டிங்கில் முதல் போட்டியில் டேவில் வில்லி பந்துவீச்சில் விரைவாக விக்கெட்டை இழந்தார் தவான். இரண்டாவது போட்டியில் கவனக்குறைவால் ரன் அவுட் ஆனார். இன்னும் கொஞ்சம் வேகமாக ஓடி ’பேட்’டை கிரீஸில் வைத்திருந்தால் அதில் இருந்து தப்பித்திருக்கலாம். தொடக்க ஆட்டக்காரர்கள் தவான், ரோகித் சர்மா மற்றும் முதல் போட்டியில் அதிரடி சதம் அடித்த கே.எல்.ராகுல் ஆகியோர் நிலைத்து நின்று அதிரடி காட்டினால் இந்திய அணி சவாலான ஸ்கோரை எட்டும். வேகப்பந்துவீச்சில் உமேஷ் யாதவ், விக்கெட் வீழ்த்துகிறார். சுழலில் சேஹலும் குல்தீப்பும் இன்றைய போட்டியிலும் மேஜிக் காட்டினால் இந்திய அணியின் வெற்றி உறுதியாகும்.


Advertisement

இங்கிலாந்து அணியில் காயம் காரணமாக அணியில் இடம் பெறாமல் இருந்த பென் ஸ்டோக்ஸ் திரும்பியுள்ளார். அவருக்காக யாரை உட்கார வைப்பது என்கிற குழப்பம் அந்த அணி கேப்டன் மோர்கனுக்கு இருக்கிறது. ஜோ ரூட்டை நீக்கிவிட்டு அவர் இறக்கப்படலாம் என்று தெரிகிறது. அந்த அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பாக இருக்கிறது. ஜோஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜேசன் ராய் ஆகியோர் நன்றாக ஆடி வருகிறார்கள். இன்றைய போட்டியிலும் அவர்கள் அதிரடியைத் தொடர்வார்கள். 

இந்திய அணி தொடரை வெல்ல தீவிரம் காட்டும் என்பதால் இன்றைய போட்டி பரபரப்பாக இருக்கும். போட்டி இன்று மாலை 6.30 மணிக்குத் தொடங்குகிறது.
 


Advertisement

Advertisement
[X] Close