
தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜரான வைகோவுக்கு எதிராக சில வழக்கறிஞர்கள் முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போதைய மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியை கண்டித்து மதிமுகவினர் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக வைகோ உள்பட 159 பேர் மீது பொது சொத்துகளுக்கு சேதம் விளைத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தூத்துக்குடி 2வது நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் ஆஜரானார். அவர் மீதான குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து வழக்கு விசாரணை வரும் 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் வைகோ ஆஜராக வந்தபோது, நீதிமன்ற வளாகத்தில் இருந்த சில வழக்கறிஞர்கள் அவருக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். பின்னர் நீதிமன்றத்தில் இருந்து வைகோ வெளியே வரும் போதும் சிலர் முழக்கம் எழுப்பினர். இதனால் கோபம் அடைந்த வைகோவின் ஆதரவாளர்கள் வழக்கறிஞர்களை நோக்கி ஓடினர். முழக்கம் எழுப்பிய வழக்கறிஞர்கள் தப்பி ஓடிவிட்ட நிலையில் ஒருவர் மட்டும் மதிமுகவினரிடம் சிக்கிக்கொண்டார். அவரை மதிமுக ஆதரவாளர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, எனக்கு எதிராக முழக்கம் எழுப்பியவர்கள் நாம் தமிழர் கட்சியை சார்ந்தவர்கள் தான் என்று குற்றம்சாட்டினார்.