Published : 06,Jul 2018 08:13 AM
சிபிஎஸ்இ சர்வாதிகார போக்குடன் செயல்படுகிறது - உயர்நீதிமன்றம்

நீட் தேர்வு வினாக்கள் தமிழ் மொழி பெயர்ப்பு விவகாரத்தில் சிபிஎஸ்இ சர்வாதிகாரத்துடன் செயல்படுகிறது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை விமர்சித்துள்ளது.
மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டிகே.ரங்கராஜன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்தார். அதில், “கடந்த ஆண்டு 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தமிழில் நீட் தேர்வு எழுதியுள்ளனர். அதில் தமிழில் 49 வினாக்கள் தவறாக உள்ளது. தவறான கேள்விகளுக்கு கருணை அடிப்படையில் ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண்கள் வீதம் 196 மதிப்பெண்கள் தரவேண்டும்” என்று வலியுறுத்தி இருந்தார்.
இந்த வழக்கின் விசாரணையில் இன்று ஆஜரான சிபிஎஸ்இ தரப்பு வழக்கறிஞர், சில கேள்விகள் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்க்கும் போது தவறாகிவிடுகிறது என்று கூறினார். அப்போது, கேள்விகளுக்கான விடைகளை பெரும்பான்மை அடிப்படையில் தேர்வு செய்கிறீர்களா? நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதேபோல், பீகார் மாநிலத்தில் மட்டும் எப்படி அதிகப்படியான மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்தனர் என்றும் நீதிபதிகள் வினவினர். வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.