
சென்னை விமான நிலையத்தில் திடீரென ரத்து செய்யப்பட்ட விமானத்தால் பயணிகள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தனர். அவர்களுக்காக அதிகாரிகளுடன் பேசி தமிழிசை உதவி செய்தார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து அந்தமான் செல்வதற்காக சுமார் 80 பயணிகள் விமான நிலையத்தில் நேற்று காத்திருந்தனர். இதில் முதியவர்கள், சிறுவர்கள் உள்பட இருந்தனர். ஆனால் அவர்கள் செல்லவிருந்த விமானம் எந்தவித முன்அறிவிப்பும் இன்றி திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர். மேலும் எந்தவித உதவியும் கிடைக்காமல் அவர்கள் தவித்தனர். அப்போது அங்கு வந்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அதிகாரிகளுடன் பயணிகளுக்காக பேசினார்.
இதனையடுத்து பயணிகள் இரவு தங்குவதற்காக வசதி செய்து கொடுக்கப்பட்டது. மேலும் அதிகாலையில் பயணம் செய்வதற்காக விமானமும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. இந்த தகவலை தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.