Published : 03,Jul 2018 05:21 AM
ஸ்ரீதேவி வாழ்க்கைக் கதையில் நடிக்க ஹன்சிகா ஆசை!

ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டால், அதில் நடிக்க தான் ஆர்வமாக இருக்கிறேன் என்று நடிகை ஹன்சிகா கூறினார்.
தமிழில் மூன்று படங்களில் நடித்து வருகிறார் ஹன்சிகா. இதுபற்றி அவர் கூறியதாவது:
நிறைய வாய்ப்புகள் வருகிறது. சிறந்த கதைகளில் நடிக்க வேண்டும் என நினைக்கிறேன். இப்போது விக்ரம் பிரபுவுடன் ’துப்பாக்கி முனை’ படத்திலும் அதர்வாவுடன் 100 என்ற படத்திலும் நடிக்கிறேன். இரண்டு படத்திலும் எனது கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கிறது. பிரபு சாருடன் இதற்கு முன் சில படங்களில் நடித்திருக்கிறேன். இப்போது அவர் மகனுடன் நடிக்க இருக்கிறேன். அடுத்து திரில்லர் படம் ஒன்றிலும் நடிக்கிறேன். ’அரண்மனை’ ஹிட்டுக்குப் பிறகு அதே போல கதையம்சம் கொண்ட சுமார் 30 கதைகள் வந்தன. ஒரே கேரக்டரில் நடிக்க வேண்டாம் என்று மறுத்துவிட்டேன்.
மும்பையில் இப்போது புதிய அபார்ட்மென்ட்டுக்கு வந்துவிட்டோம். எனது அறையை நானே டிசைன் செய்துள்ளேன். இத்தாலி மற்றும் துபாயில் இருந்து சில கலைப் பொருட்களை வாங்கி அழகுபடுத்தியுள்ளோம். அந்த அறையில் நேரத்தைச் செலவழிப்பது பிடித்திருக்கிறது.
இப்போது வாழ்க்கை வரலாற்று கதைகள் படமாகி வருகிறது. இதில் யார் கேரக்டரில் நடிக்க ஆர்வம் என்று கேட்கிறார்கள். ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு படமானால் அதில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். அவர்தான் என் ரோல் மாடல். ’புலி’ படத்தில் அவருடன் ஒன்றாக நடித்துள்ளேன். அவர் நடிப்பில் நான் பார்த்த முதல் படம், ’சத்மா’. அப்போது எனக்கு பத்து வயது. அந்தப் படத்தில் பார்த்த ஸ்ரீதேவியின் முகம் இப்போது வரை எனக்குள் பதிந்திருக்கிறது’ என்றார்.