Published : 02,Jul 2018 09:53 AM

பந்தாட துடிக்கும் இங்கிலாந்து... பதிலடிக்கு ரெடியாகும் விராத் டீம்!

Tomorrow-England-vs-India--1st-T20I

இந்தியா, இங்கிலாந்து மோதும் முதல் டி20 கிரிக்கெட் போட்டி நாளை தொடங்கயிருக்கிறது. இத்தொடருக்கு முன்னோட்டமாக அயர்லாந்துடன் நடைப்பெற்ற இரண்டு டி20 போட்டியிலும் அபார வெற்றி பெற்ற நம்பிக்கையுடன் இந்திய அணி இங்கிலாந்தில் இறங்கியுள்ளது. அங்கு  மூன்று டி20, மூன்று ஒரு நாள் போட்டி, ஐந்து டெஸ்ட்-களில் விளையாடுகிறது இந்திய அணி.

அயர்லாந்து அணியுடன் நடந்த இரண்டாவது போட்டிக்கு பிறகு பேசிய கேப்டன் கோலி, ‘இந்த வெற்றியின் மூலம் தேவையான நேரத்தில் சரியான உத்வேகத்தை பெற்றிருக்கிறோம். சமநிலையிலான திறமையை வீரர்கள் வெளிப்படுத்தியதில் மகிழ்ச்சி. எனக்கு இப்போதுதான் தலைவலி ஆரம்பித்திருக்கிறது. யாரை ஆடும் லெவனில் சேர்ப்பது, யாரை விடுவது என்பதற்கான தலைவலி இது. இது ஆரோக்கியமான அறிகுறிதான்’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் நாளைய போட்டியில் யார், யார் விளையாடுவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். 

இந்திய அணியில் தொடக்க வீரர்களான ரோகித் மற்றும் தவான் சிறப்பாக விளையாடி வருகின்றனர். அயர்லாந்து அணியுடான முதல் டி20 போட்டியில் அதிரடியாக விளையாடி இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 150 ரன்களுக்கு மேல் குவித்து அசத்தியது. இரண்டாவது போட்டியில் தவானுக்கு ஓய்வு அளிக்கப்பட, அந்த இடத்தில் களம் இறங்கிய ராகுல் வாய்ப்பை கனகச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்டார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர், இந்த வருடம் 700 ரன்கள் கடந்து சராசரி 50 வைத்திருக்கும் வீரர். ஸ்ட்ரைக் ரேட் 150 மேல். அனைத்து விதமான கிரிக்கெட்டுக்கும் ஏற்ற நபராக வளர்ந்து வரும் இவருக்கு வருங்காலங்களில் இந்திய அணியில் இடம் கிடைக்க பிரகாசமான வாய்ப்பு உள்ளது. எனினும் ரோகித்- தவான் இணை ஏற்கனவே நிருபித்த ஜோடி. தொடக்க வீரர்களாக பல சாதனைகளையும் படைத்த இந்த ஜோடியை, கோலி பிரிக்க வாய்ப்பு குறைவு தான். தொடக்க வீரராக விளையாடாவிட்டாலும் மாற்று இடத்தில் விளையாட ராகுலுக்கு வாய்ப்பு அதிகம். 

 டி20 போட்டியில் மூன்றாவது வீரராக களம் காணும் ரெய்னா, அயர்லாந்துடன் நடந்த இறுதி போட்டியில் தன் வழக்கமான அதிரடியை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்தார். டி20 போட்டியில் அவருக்கான இடம் உறுதி என்றாலும் பவுன்சர் பந்துகளுக்கு ரெய்னா திணறுவார் என்ற பிம்பத்தை உடைக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு உள்ளது. கேப்டன் கோலி இன்னும் 8 ரன்களை எடுத்தால் டி20-போட்டியில் 2000 ரன்கள் கடந்த நான்காவது வீரர் என்ற சிறப்பைப் பெறுவார். அவர் நான்காவது வீரராக களம் இறங்கும் நிலையில் அடுத்து 5, மற்றும் 6 இடத்தில் யார் விளையாடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தோனி 5 வீரராக விளையாட அதிகம் வாய்ப்பு உண்டுயென்றாலும் அணியின் நிலைமையை பொறுத்தே களம் இறங்குவார். 

உள்ளூர் போட்டியில் சிறப்பாக விளையாடியதால் நீண்ட வருடங்களுக்கு பிறகு கடந்த ஆண்டு அணியில் இடம் பிடித்த தினேஷ் கார்த்திக், இலங்கையில் நடந்த முத்தரப்பு போட்டியில் ரசிகர்களை கவர்ந்தார். ஐபிஎல் போட்டியிலும் சிறப்பாக விளையாடிய கார்த்திக் கடைசி கட்டத்தில் அதிரடி மற்றும் வித்தியாசமான ஷாட்டுகளால் மிரட்ட கூடியவர். அதுவும் இங்கிலாந்து மாதிரியான வலுவான அணியை எதிர்கொள்ள மிடில் ஆடர் மிக அவசியம் என்பதால் கார்த்திக்கை நிச்சியம் கோலி அணியில் சேர்ப்பார். அதே போல் மணிஷ் பாண்டே பலமுறை அணியில் இடம் கிடைத்தாலும் இதுவரை பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. உள்ளூர் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தும் பாண்டே இந்திய அணியில் விளையாடும் போது தடுமாறுகிறார் என்ற விமர்சனத்தை இந்த தொடரில் உடைக்க வேண்டும். 

அண்மை காலமாக ரன் குவிக்க முடியாமல் தவித்து வந்த ஹர்திக் பாண்டியா, கடைசியாக அயர்லாந்துடன் நடந்த போட்டியில் 9 பந்துகளில் 32 ரன்கள் குவித்து அசத்தினார். எனினும் பந்துவீச்சில் இன்னும் முன்னேற்றம் காணவேண்டிய பாண்டியா, இங்கிலாந்து தொடரில் முக்கியமான வீரராக பார்க்கப்படுகிறார். தொடர்ந்து பந்துவீச்சில் அசத்திவரும் புவனேஷ்வர் குமார் அவ்வப்போது பேட்டிங்கிலும் கை கொடுப்பது அணிக்கு பலம். கடைசி கட்ட ஓவர்களை சிறப்பாக வீசி வரும் பும்ரா காயம் காரணமாக விலகியிருப்பது பலவீனமே என்றாலும் உமேஷ் யாதவ் அவர் இடத்தை நிரப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் குல்தீப் யாதவ், சேஹல் கூட்டணி சுழல் பந்துவீச்சில் அசத்திவருகிறது. இந்த அசத்தல் கூட்டணி அயர்லாந்துடன் நடந்த போட்டியிலும் கலக்கியதை பார்க்க முடிந்தது. சித்தார்த் கவூல் மற்றும் தீபக் சாஹர் இருவரும் அண்மைகாலங்களில் சிறப்பாக விளையாடி வந்தாலும் நாளை நடைப்பெறும் போட்டியில் இடம் பெறுவது கடினமே. 

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்