[X] Close

தொடரும் அவலம்... 8 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..! கொந்தளிக்கும் மக்கள்..!

8-year-old-girl-raped-in-Mandsaur

மத்தியப் பிரதேசத்தில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு காலத்தில் பெண் குழந்தை என்றாலே கள்ளிப்பால் கொடுத்து கொல்லும் வழக்கம் இருந்து வந்தது. அதனை முற்றிலும் ஒழிக்க, பெண் குழந்தையை காப்பாற்ற பாடுபட்டவர்கள் ஏராளம். தற்போது பெண் குழந்தைகள் பற்றி அனைவர் மனதிலும் உயர்ந்த எண்ணம் உருவாகி வருகிறது. ஆணுக்கு நிகராக பெண்களும் அனைத்து துறைகளிலும் சாதிக்க ஆரம்பித்து விட்டனர். உண்மையை சொல்லப்போனால் ஆண் குழந்தையை விட பெண் குழந்தைகளை விரும்பும் பெற்றோர்கள் அதிகரித்து வருகின்றனர். ஆனால் இன்னொரு பக்கம் பெண் குழந்தைக்கு எதிராக ஆங்காங்கே நடக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் நம் நெஞ்சை பதைபதைக்க வைத்து விடுகிறது. போரூர் சிறுமி, கத்துவா சிறுமி, தூத்துக்குடி சிறுமி என சிறுமிகளுக்கு நாட்டில் நடைபெறும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை பார்க்கும்போது குற்றவாளிகள் மீது நமக்கு வரும் ஆத்திரத்தை வார்த்தைகளால் அடக்க முடியாது.


Advertisement

கயவர்கள் ஒருபுறம் இருந்தாலும், நம் குழந்தைகளை நாம் தான் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் குழந்தைகளை பொத்தி பொத்தி பாதுகாத்து வருகின்றனர் பெற்றோர்கள். நல்ல தொடுதல் எது..? கெட்ட தொடுதல் எது..? என சொல்லிக் கொடுப்பதோடு வெளியே அனுப்பும் குழந்தைகள் எப்போது வீட்டிற்கு வருவார்கள் என வாசலில் கண் வைத்து காத்திருக்கின்றனர் பெற்றோர்கள். ஆனாலும் பெண் குழந்தைகளை குறி வைக்கும் கயவர்களும் குறைந்தபாடில்லை. மத்தியப் பிரதேசத்தில் 8 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த சிறுமி சுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வயது 8. இவரை கடந்த ஜூன் 26-ம் தேதி வழக்கம்போல பள்ளிக்கு அனுப்பிய பெற்றோர்கள், நம் குழந்தை வீட்டிற்கு வருவாள் என காத்திருந்தனர். ஆனால் பெற்றோர் நினைத்தபடி குழந்தை வீடு திரும்பவில்லை. குழந்தை பள்ளி முடிந்ததும் பள்ளிக்கு வெளியே காத்திருந்துள்ளார். அப்போது அங்கே வந்த இர்ஃபான் என்ற 20 வயது இளைஞர், குழந்தையை கடத்தி அங்கிருந்த முட்புதர் அருகே கொண்டுச் சென்றுள்ளார். பின்னர் மறைவான இடத்தில் வைத்து 8 வயது சிறுமி என்றும் பாராமல் குழந்தையை அந்த இளைஞர் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் குழந்தை இந்த விஷயத்தை யாரிடமாவது சொல்லி விடக் கூடாது என்பதற்காக குழந்தையின் தொண்டையை கத்தியால் அறுத்த அந்த இளைஞர், அங்கிருந்து தப்பிவிட்டார்.

இதனிடையே குழந்தையை காணாமல் பரிதவித்த பெற்றோர்கள், பல இடங்களில் குழந்தையை தேடியுள்ளனர். ஆனால் எங்கு தேடியும் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். போலீசாரும் குழந்தையை தேடிவந்த நிலையில், குழந்தை முட்புதர் ஒன்றில் மயங்கிய நிலையில் கிடந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

பின்னர் குழந்தை விரைவாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை உறுதி செய்தனர். குழந்தைக்கு நேற்று அறுவை சிகிச்சையும் முடிவடைந்துள்ளது. குழந்தை அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக தெரிவிக்கும் மருத்துவர்கள், காயம் ஆழமாக இருப்பதாக குணமடைய இன்னும் காலம் எடுக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த இர்ஃபான் என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் தினக்கூலியாக பணியாற்றி வந்ததும் தெரியவந்துள்ளது. போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் இர்ஃபானிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு முன்னதாகவும் இர்ஃபான் மீது பல கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். 

இதனிடையே இந்த சம்பவம் குறித்து அறிந்த மத்தியப் பிரதேச மாநில மக்கள், குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மத்தியப் பிரதேச முதலமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சவுகான், “ பாதிக்கப்பட்ட சிறுமியின் உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விரைவில் இவ்வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும். குற்றவாளி சாகும் வரை தூக்கிலிடப்பட வேண்டும்” என தெரிவித்தார்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close