Published : 30,Jun 2018 01:51 AM
தமிழகத்தின் முதல் திருநங்கை வழக்கறிஞர்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த திருநங்கை சத்தியஸ்ரீ சர்மிளா வழக்கறிஞராக பொறுப்பேற்கவுள்ளார்.
சக மனிதர்களை போல பெற்றோர்களுடன் வாழ்ந்து வந்த சத்தியஸ்ரீ சர்மிளா, தான் ஒரு திருநங்கை என்பதை உணர்ந்ததும் குடும்பத்தினர் அவரை ஒதுக்கி வைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து சொந்த ஊரான பரமக்குடியில் இருந்து கண்ணீருடன் வெளியேறிய அவர், சமூகத்தில் அந்தஸ்துடன் வாழ வேண்டும் என்று வைராக்கியத்தை தனக்குள் விதைத்துக் கொண்டார். அவருக்கு செங்கல்பட்டு அருகே உள்ள நடராஜபுரத்தில் வசித்து வந்த மற்றொரு திருநங்கை ஆதரவு அளித்து வந்துள்ளார். ஏற்கெனவே சட்டக் கல்லூரியில் படிப்பை முடித்தவர் என்பதால் வழக்கறிஞராக தனது வாழ்க்கையை தொடர அவர் விரும்பினார்.
எனினும், திருநங்கைகளுக்கு அங்கீகாரம் கிடைத்த பிறகே அந்தப் பணியில் இணைய வேண்டும் என்ற தீர்க்கமான முடிவுடன் கடந்த 11 ஆண்டுகளாக காத்திருந்தார் . தற்போது அதற்கான காலம் கனிந்ததை தொடர்ந்து, இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சிலில் வழக்கறிஞர் பணியை தொடர்வதற்காக பதிவு செய்யவுள்ளார். இவர் பரமக்குடியில் பள்ளிப் படிப்பையும், சேலம் அரசு சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பையும் முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.