என்ன செஞ்சிட்டார் கமல் ? சினேகனுடன் சிறப்பு பேட்டி

என்ன செஞ்சிட்டார் கமல் ? சினேகனுடன் சிறப்பு பேட்டி
என்ன செஞ்சிட்டார் கமல் ? சினேகனுடன் சிறப்பு பேட்டி

நடிகர் கமல்ஹாசன் தொடங்கியிருக்கும் “மக்கள் நீதி மய்யம்” கட்சியின் தொடக்க விழா நிகழ்ச்சி முதல் இன்று வரை அந்த கட்சியில் சுறுசுறுப்பாய் இயங்கி வருகிறார் கவிஞர் சினேகன். இந்த நிலையில் அவர் எழுதிய பாடல்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் இன்று வெளியிடுகிறார். இதனையடுத்து புதியதலைமுறை இணையதளம் சார்பாக அவரை தொடர்பு கொண்டு சில கேள்விகளை முன் வைத்தோம்.

இன்று நடக்கும் உங்கள் விழா பற்றி...? 

கட்சி ஆரம்பிச்ச முதல் கமல் அவர்களுடைய சினிமா பாடல்கள் தான் கட்சி நிகழ்ச்சிக்கு முன் ஒளிபரப்பாகி வருகிறது. அதனால் கமல் அவர்களை பற்றியும், கட்சி தொண்டர்களுக்காகவும் பாடல் எழுதனும்னு முடிவு பண்ணேன் அப்படி செஞ்சதுதான் இந்தப் பாடல். அதை அவர் கையில் வெளியிட வேண்டும் என நினைத்தேன் அவரிடமும் சொன்னேன், அவரும் ஒப்புக்கொண்டார். அப்படிதான் இந்த விழா என முடித்தார். 

நீங்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்ததற்கான முக்கிய காரணம்..?

அவர் மீது உள்ள நம்பிக்கை. அவருடைய ஆளுமை ! ஆளுமை என்பது ஒரு மனிதனுடைய முதல் தகுதி. அந்த தகுதி தான் தலைமைக்கான தகுதியாகவும் இருக்கும். வெற்றியோ தோல்வியோ எவ்வளவு இடையூறு வந்தாலும் அதை முடிக்கிற தன்மை ஒரு தலைவனுக்கு வேண்டும். அது கமல் அவர்களிடம் இருக்கு. சாதாரணமாக ஒரு கதாபாத்திரத்திற்கு அவர் எவ்வளவு மெனக்கெடுகிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படி இருக்கும் ஒருவர் நாட்டுக்கும் மக்களுக்கும், இந்த மண்ணுக்கும், மொழிக்கும் ஒரு வேலையை செய்யப்போறாருனா அதை எவ்வளவு அழுத்தமாய் செய்வார் என்கிற நம்பிக்கைதான் நான் அவரோடு பயணிக்க காரணம். 

எதையெல்லாம் எதிர்பார்த்து கமல் கட்சியில் இணைந்தீர்களோ, அப்படி கட்சி பயணிப்பதாய் நினைக்கிறீர்களா..?

நிச்சயமாக...! நிதானமாக பயணிப்பதால் வெளிச்சமாய் வெளியில் தெரியவில்லை. வளர்பிறை என்பது மெதுமெதுவாகத்தான் முழுபிறையாகும். அதுதான் இயற்கையின் நீதியும் கூட. மின்மினி பூச்சி போல கண்களை திறந்து வெளிச்சம் கொடுத்துட்டு உடனே செத்து போறது இல்லை. நிதானமான வேகத்தில் "மய்யம்" நகர்ந்து கொண்டிருக்கிறது. நிச்சயம் அது ஒரு நாள் தெரியும். 

நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு உங்கள் கட்சி மக்களிடம் தாக்கத்தை உண்டாக்கியுள்ளதா...?

நிச்சயமாக. இங்கு திராவிட கட்சிகளும் அதன் கிளைகட்சிகளும் ஆண்டாண்டு காலமாய் இருக்குகிறது. ஆனா கட்சி ஆரம்பிச்ச 90 நாட்களே ஆன எங்கள் கட்சி தனித்துவமாய் தெரிய தொடங்கியிருக்கு. இது வியக்கத்தக்கது.

அப்படி என்ன செஞ்சிட்டாரு..?

எங்கெல்லாம் மக்களுக்கு அநீதி நடக்கிறதோ.. யாராவது நமக்காக குரல் கொடுக்க மாட்டார்களா என ஏங்கி கிடக்கிறார்களோ அங்கு எல்லாம் கமல் அவர்களுடைய குரல் ஒலிக்கும்.

அது மட்டுமே ஒரு தலைவனுக்கான தகுதி ஆகிடுமா..? இதை வழக்கமா எல்லா கட்சிகளுமே செய்றாங்க... அப்பறம் நீங்க எதுக்கு...?

எல்லோரும் குரல் கொடுப்பதில் ஒரு சுயநலம் இருக்கு. அவர்களுக்கு இருக்கிற வாக்கை எப்படியாவது தக்கவச்சிக்கணும் அதுக்காக ஓடுறாங்க. ஆனால் எங்களுக்கு அப்படி இல்லை. நாங்கள் தேர்தலையோ, பதவியையோ , தலைமையோ, எதையும் எதிர்பார்த்து நற்பணி மன்றத்தில் இருப்பவர்கள் பயணிக்கவில்லை. செயலை மட்டும் எதிர் நோக்கி பயணிக்கிறாங்க..ஒவ்வொரு படியாகத்தான் நாம் முன்னேற முடியும். அப்படியான முதல் படிதான் கமல் அவர்களின் அநீதிக்கு எதிரான குரல்.


கமல் கட்சி தொடங்கி 4 மாதத்திற்கு மேல நகர்ந்துடுச்சி...ஆனால் இதுவரை நீங்கள் எந்த போராட்டத்தையும் முன்னின்று நடத்தியதாக தெரியலையே...?

எல்லோரும் பயந்துக்கொண்டு இருந்த சமயம் தூத்துக்குடிக்கு கமல் தான் போனார். அவர் மாற்று அரசியல் செய்யணும்னு நினைக்கிறார்.  வழக்கமாய் போராட்டம் என்றாலே வீதியில் இறங்கி போராடுவது, கொடிபிடிப்பதும் கூச்சல் போடுவதும், சாலை மறியல் செய்வதும் தான் நாம் நாற்பது ஆண்டுகால அரசியலில் பார்த்துக்கொண்டுயிருக்கிறோம். ஆனால் இந்த போராட்டங்கள் படிபடியாக எங்கே போகிறது என்றால் ஒரு மனுவின் மூலமாக தலைமைக்கு போகிறது.

பத்து நாள் போராட்டம், இருபது நாள் போராட்டம், பேருந்து எரிப்பு போராட்டம், பட்டினி போராட்டம், எந்த வடிவ போராட்டமாக இருந்தாலும் கடைசி கட்டத்தில் ஒரே ஒரு காகிதத்தில் மனுவாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கோ, அரசு துறைக்கோ போகிறது. இத்தனை போராட்டம் தேவையில்லை என்றுதான் கடைசியாய் செய்வதையே நாம் முதலில் செஞ்சிடலாம் என்பதால் தான் இதை மாற்று அரசியல்னு சொல்றோம். 

(பேட்டி நாளையும் தொடரும்)

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com