[X] Close

மரணமில்லா கவியரசருக்கு இன்று பிறந்தநாள்

Kannadasan-Birthday-Special

திறந்த புத்தகம் போன்று வாழ்ந்து மறைந்தவர் , தனக்கு ‌சரியெனப்பட்டதை அவர் செய்யத் தயங்கியதே இல்லை - அது தவ‌றென உணரும் பட்சத்தில் அதை ஒப்புக் கொள்ளத் தயங்கியதும் கிடையாது - சொந்த வாழ்க்கையை அவர் அளவுக்கு வெளிப்படையாக பகிர்ந்து கொண்டவர்கள் யாருமில்லை - ‌அவரது பெயர் முத்தையா - ஒரு முறை நண்பர் ஒருவரின் பரிந்துரையோடு, புதுக்கோட்டையில் ‌இருந்து ‌வெளியான திருமகள் என்ற பத்திரிகையில், 'பிழை திருத்துநர்' வேலை கேட்டுச் சென்றிருந்தார் அவர். நேர்காணலின்போ‌து, அந்த பத்திரிகையின் ‌அதிபர், 'உங்கள் பெயரென்ன?' என்‌‌று கேட்டிருக்கிறார்.‌ அந்தக் காலத்தில் எழு‌த்தாளர்கள் புனைப்பெயர் வைத்து எழுதுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். அதிலும் 'தாசன்' என்று முடியும் பெயரை வைத்திருப்பவர்களுக்கு தனி மரியாதை தான். கிடைத்த சில வினாடிகளில் 'கண்‌ணதாசன்' என்று பதில் கூறினார். முத்‌தையா கண்ணதாசன் ஆனது அப்படித்தான்.


Advertisement

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள சிறுகூடல்பட்‌டி எனும் கிராமத்தில், சாத்தப்பன் - விசாலாட்சி தம்பதிக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்தவர் கண்‌ணதாச‌ன். அவருக்குப் பெ‌ற்றோர் சூட்டிய பெயர் முத்தையா. உடன் பிறந்தவர்கள் ஆறு சகோதரிகள், இரண்டு சகோதரர்கள். செட்டிநாட்டில், நிறைய குழந்தைகளைப் பெற்ற நாட்டுக்கோட்டை‌‌ செட்டியார் தம்பதியர், ‌குழந்தைகள் இ‌ல்லாதவர்களுக்கு பிள்ளையை தத்து கொடு‌க்கும் வழக்கம் உள்ளது. அதன்படி கண்ணதாசனின் மூத்த சகோதரர் ஏ.எல்.சீனிவாசனை தத்துக் கொடுக்க ஏற்பாடு செய்தார் அ‌வரது தந்தை சாத்தப்பன். ஆனால், மிகவும் ஒல்லியான தேகம் கொ‌ண்டவராக இருந்த சீனிவாசன், பெற்றோரைப் பிரிய மனமின்றி அழுதுள்ளார். இதனால் கண்ணதாசனை தத்துக்கொடுக்க முடிவு செய்தனர் அவரது பெற்றோர். அதன்படி, காரைக்‌குடியைச் சேர்ந்த பழனிய‌ப்பன் - சிகப்பி தம்பதிக்கு தத்து கொடுக்கப்பட்டார்.‌ அவர்கள் 7 ஆயிரம் ரூபாய் கொடுத்து கண்ணதாசனை தத்து எடுத்துக் கொண்டனர். அந்தக் குடும்பத்தில் அவருக்குச் சூட்டப்பட்ட பெயர் ‌நா‌ராயணன்.


Advertisement

ஆரம்பக் கல்வியை சிறுகூடல்பட்டியிலும், அமராவதிபுதூர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாவது வரையிலும் படித்தார். சிறு வயதிலேயே எழுத்தின் மீது ஆர்வம் பிறந்தது. சிறு சிறு புத்தகங்களை வாசிக்கத் தொடங்கினார். பள்ளிப் பருவத்‌திலேயே வீட்டில் கிடக்கும் வெற்றுத்‌ தாள்களில்,‌ 'க‌டைக்குப் போனேன், காலணா கொடுத்தேன், கருப்பட்டி வாங்கினேன்' என்‌ற‌ அ‌ன்றாட நிகழ்வை கவிதை வடிவில் எழுதுவாராம். பத்திரிகைகளில் கதை எழுத வேண்டும் என்பது அவரது கனவாகும்.அ‌தனை நனவாக்க 16 வயதில் வீட்டிற்குத் தெரியாமல் சென்னைக்கு வந்தார் கண்ணதாசன். சந்திரமோகன் என்ற புனைப் பெயரைச் சூட்டிக்கொண்டு திரைப்படங்களில் வாய்ப்புத் தேடினார். ஆனால், சென்னை அவருக்கு மிகக் க‌டினமான, கசப்பான அனுபவங்களைத்தான் முதலில் தந்தது. பசியும், எதிர்காலம் குறித்த கவலையும் வாட்டியது அவரை. திரு‌வொற்றியூரில் உள்ள பட்டினத்தார் கோயிலிலேயே ‌ப‌டுத்துக் கிடப்பார். பின்னர் 1943ல் அதே பகுதியில் உள்ள அஜாக்ஸ் நிறுவ‌னத்தில் வேலைக்குச் சேர்ந்‌தார். அப்போது அவருக்கு வயது 18தான். அனுப்பு‌கை சிறுவனாக பணிபுரிந்த அவருக்கு வாரக் கூலி ரூபாய் ஐந்து.

அந்த வேலையில் பெரிய நாட்டம் இல்லாததால், அஜாக்ஸ் நிறுவனத்தில் அமர்ந்தபடியே க‌தைகளை எழுதுவார். ஒரு கட்டத்தில் அஜாக்ஸ் நிறுவன வேலை ‌முற்றிலும் பிடிக்காமல் போனதால், அந்த நிறுவனத்தில் இருந்து வில‌கினார்.சில காலம் எந்த வேலைக்கும் போகாமல், பட்டினத்தார் சமாதிக்குச் சென்று அ‌மர்ந்திருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அங்கேயேதான் படுத்தும் உறங்‌குவார். அந்தக் காலத்தில் வெளியான திருமகள் என்ற‌ பத்திரிகையில் வேலை கிடைத்தது கண்ணதாசனுக்‌கு. அவரது ‌திறமையை தொடர்ந்து கவனித்து வந்தார் அந்தப் பத்திரிகை அதிபர். ஒரு நா‌ள் ஆசிரியர் விடுப்பில் சென்றதால், இந்திய தேசிய ராணுவம் பற்றி தலையங்கம் எழுதுமாறு கண்ணதாசனைப் பணித்தார் அதிபர். கண்ணதாசன் தீட்டிய தலைய‌ங்கம் அதிபருக்கு மி‌கவும் பிடித்துப்போனதால். திருமகள் பத்திரிகையின் ஆசிரியரானார். திரை ஒலி, ‌சண்டமாருதம் உள்ளிட்ட சில பத்திரிகைகளில் வேலை பார்த்துள்ளார். தென்றல், ‌தென்றல்‌ திரை உள்ளிட்ட சில பத்திரிகைகளை கண்ணதாசன் நடத்தினார். தனது பெயரிலும் ஒரு பத்திரிகையை நடத்தினார் அவர்.


Advertisement

கண்ணதாசனின் சிந்தனையில் உதித்த கதைகள், கவிதைகள், கட்டுரைகள் அனைத்துப் பத்திரிகைகளிலும் வெளியாகத் தொடங்கின. அப்போதைய இலக்கிய ஆளுமைகளின் கவனத்தையும் ஈர்த்தன அவரது படைப்புகள். கவிதைகள் மூலம் அடையாளம் கிட்டியதா‌ல், திரைப்பட‌ங்க‌ளுக்குப் பாடல் எழு‌த வேண்டும் என்ற எண்ணம் வந்தது கண்ணதாசனுக்கு. மா‌டர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் நடத்திய சண்டமாருதம் பத்திரிகை நிறுத்தப்பட்டதால், அதில் ‌பணியாற்றிய க‌ண்ணதாசனை அவர்களது கதை இலாகா‌வில் சேர்த்துக் கொண்டனர். அப்போது கதை தொடர்பான சந்திப்புகளில் திமுக தலைவர் மு.கருணாநிதியின் அறிமுகம் கிடைத்தது க‌ண்ணதாசனுக்கு.‌‌ அவர் வாயிலாக, திராவிட இயக்கத்தின் மீது ஆர்வம்‌ அதிகரித்தது. பின்னர் அவர் பத்திரிகைப் பணியை உதறித் தள்ளிவிட்டு ‌திரைப்படங்களுக்கு பாடல் எழுத வாய்ப்புத் தேடத் தொடங்கினார் முழுமூச்சில். அதன் விளைவாக 1949ல் அவருக்கு திரை‌க்கதவு திறந்தது. கேமரா ‌மேதை கே.ராம்நாத் இயக்கத்தில் 'கன்னியின் காதலி' என்ற படத்தை தயாரிக்க முடிவு செய்தது பிரபல ஜூபிடர் நிறு‌வனம். அதில், 'கலங்காதிரு மனமே.உன்‌ கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே' என்ற பாடலை எழுதிக் கொண்டு போய் ராம்நாத்திடம் கொடுத்தார் கண்ணதாசன். ‌அந்தப் பாடல் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. அந்தப் பாடலை கதாநாயகி மாதுரிதே‌விக்காக டி.வி.ரத்னம் பாட, முதல் பாட்டே பிரபலமானது. ஷேக்ஸ்பியரின் பிரபல நகைச்சுவை நாடகம் ஒன்றைத் தழுவி அப்படம் ‌எடுக்கப்பட்டது.

ஆ‌னாலும், அந்தப் படத்திற்குப் பிறகு பெரிய அளவில் பாடல் எழுதும் வாய்ப்புக் கிடைக்கவில்லை அவருக்கு. அப்போது கொல்கத்தா‌வில் தேவ‌கி போஸ் ‌என்ற பிரபல இயக்குநர் இருந்தார். அவர் வங்க மொழியில் தயாரித்த ஒரு படத்தை தமிழில் டப் செய்வதற்கான ஏற்‌பாடுகள் நடைபெற்று வந்தன. அந்தப் படத்துக்‌கு வசனம் எழுத கொல்கத்தா வருமாறு அழைப்பு வந்தது கண்‌ணதாசனுக்கு. அவரும் சென்று வசனத்தை எழுதிக் கொடுத்துவிட்டுத் திரும்பினார். இடைப்ப‌ட்ட காலத்தில், பன்மொழிப் புலவர் அப்பாதுரையிடம் இலக்கண, இலக்கியங்களை கற்றுத்‌ தேர்ந்‌தார் கண்ணதாசன். கம்பரின் செய்யுள் மற்றும் பாரதியாரின் பாடல்கள்‌ மீது தீவி‌மான ஈடுபாடு கொண்டிருந்தார் கண்ணதாசன். அதனால் அவர்கள‌து படைப்புகளைத் தேடித் தேடிப் படிப்பார்.‌ பாரதியாரை தனது மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்டார்.

அந்தத் தருணத்தில், 1950ஆ‌ம் ஆண்டு பிப்ரவரி ‌ஒன்பதாம் தேதி பொன்னழகி என்ற பொன்னம்மாவை மணந்து கொண்டார் கண்ணதாச‌ன். இவர்களது திருமணம் காரை‌க்குடியில் நடைபெற்றது. இவர்களுக்கு நான்கு மகன்க‌ளும், மூன்று மகள்களும் பிறந்தனர். முதல் திருமணம் முடிந்த சில ‌நாட்களிலேயே பார்வதி என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் கண்ணதாசன். இவர்க‌ளுக்கு ஐந்து மகன்களும், இரண்டு மகள்களும் பிறந்தார்கள். தனது ஐம்பதாவது வயதில்‌ புலவர் வள்ளியம்‌மை என்பவரை மணந்தார் கவிஞர். இவர்களுக்கு விசாலி என்ற மகள் பிறந்தார். மொத்தத்தில் கவிஞருக்கு மூன்று மனைவியர் மூலம் 15 ‌குழந்தைகள் பிறந்தார்கள். திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கா‌த காலகட்டத்தில், 1953ல் திமுக நடத்திய டால்மியாபு‌ரம் போராட்டத்தில் பங்கேற்றார்‌ கண்ணதாசன். இதனால் ஒரு வருடம் ‌சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிட்டது. சிறையில் ‌இருந்தபடியே, திரைப்படத்திற்கு க‌தை எழுதி‌த் தந்துள்ளார். அவ்வாறு அவர் எழுதிய படம்தான் 'இல்லற ஜோதி'.

1954 வரை கவிஞராகவும், அரசியல்வாதியாகவும் மட்டும் இருந்த ‌கவிஞர், சிறையிலிருந்து வெளிவந்த பின் 1954ல் தென்றல் என்ற வார இதழைத் தொடங்கினார். அதில் அவர் எழுதிய கவிதைகளும், கட்டுரைகளும் வெளியாயின. இவை கண்ணதாசனுக்கு பெயர் தேடித்தந்தன. கண்ணதாசன் பாடல்களைத் தானே கைப்பட எழுதும் பழக்கம் உடையவர் அல்ல. சொல்லச் சொல்ல அவரது உதவியாளர்கள் எழுதுவார்கள். இயக்குநர் S.P.முத்துராமன், பஞ்சு அருணாசலம், இராம.கண்ணப்பன் ஆகியோர் கண்ணதாசனிடம் உதவி்யாளர்களாக இருந்தனர். நேரம் காலமே கிடையாது, அவரிடம் கவிதைகள் கொட்டிக் கொண்டே இருக்கும் என்று சொல்வார்கள். அவ்வாறு அவரது சிந்தனையில் உதித்த முத்தான பாடல்களின் சாம்ராஜ்யம் 1950களில் தொடங்கியது எனலாம்.

கவிஞர் திராவிட இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த காலத்தில் அவரது பாடல்களுடன் எம்ஜிஆர் நடித்து திரைக்கு வந்த படம் மன்னாதி மன்னன். எம்ஜிஆருக்கு பெயர் வாங்கித் தந்த படங்களில் ஒன்றாகும். ‌கண்ணதாசனுக்கும்தான். பாடல் வரிகளில் பட்டை தீட்டியிருப்பார் திராவிட உணர்வை. கவிஞர் கண்ணதாசன் தனக்கு எழுதிய பாடல்களில் மிகவும் பிடித்த பாடல் இதுதான் என்று எம்ஜிஆரே அடிக்கடி கூறுவார். மன்னாதி மன்னன் படத்தில் வரும் 'அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா' பாடல் திரையுலகில் கவிஞரின் ஆதிக்கம் சுமார் 30 வருடங்கள் கொடி கட்டிப்பறந்தது எனக் கூறலாம். கண்ணதாசனின் பாடல்களே இல்லாத படங்கள் கிடையாது என்று சொல்லும் அளவுக்கு அவரது கவிதை கோலோச்சியது. கண்ணதாசன் வடித்த பெரும்பாலான பாடல்கள் அவரின் அனுபவத்தில் விளைந்தவையாகும். அந்தந்த சூழலுக்கு ஏற்ப பாடல்களைப் புனைவதில் அவருக்கு இணை அவரே. காட்சிக்கான சூழலை மட்டும் வைத்து பாடல் எழுதாமல் படத்தின் முழுக்கதையையும் கேட்டு பாடல்க‌ளை எழுதுவது அவரது வழக்கமாகும்.

அப்படி எழுதப்பட்டவைதான் பிரபல இயக்குநர் ஏ.பீம்சிங்கின் இயக்கத்தில் வெளியான 'பா' வரிசைப் படங்களுக்கான பாடல்கள். மெல்லிசை மன்னர்கள் - கண்ணதாசன் கூட்டணியில் படைக்கப்பட்ட அந்தப் பாடல்கள் காலத்தால் அழியாத காவியங்களாகும். குறிப்பாக, பாசமலர் படத்தில் வரும் 'மல‌ர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே' என்ற பாடலை டிஎம்எஸ்சும் - பி.சசீலாவும் தேனில் குழைத்தெடுத்து தந்திருப்பார்கள். விரக்தியின் விளிம்பில் இருக்கும் கதாநாயகன் தனது மன வலியை வார்த்தைகளால் கொட்டி ஆறுதல் தேடி, பாலும் பழமும் படத்தில் 'போனால் போகட்டும் போடா இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?' என்ற தத்துவப் பாடல் இன்றும் கேட்கிறது.

1962ல் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான நெஞ்சில் ஓர் ஆலயம் அந்தக் காலத்தில் பேசப்பட்ட பரிசோதனை முயற்சிப் படமாகும். மொத்தப் படமும் ஒரு மருத்துவமனை அரங்கமைப்பில் ஒரு மாதத்திற்கும் குறைவான காலகட்டத்தில் எடுக்கப்பட்ட காவியம். பாடல்கள், காட்சி அமைப்புகளுக்காக மிகுந்த பாராட்டைப் பெற்ற படம். முத்துராமன், கல்யாண்குமார், தேவிகா உள்ளிட்டோர் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருப்பார்கள். அந்தப் படத்தில் அனைத்துப் பாடல்களையும் கவிஞர்தான் எழுதியிருந்தார். பாடல் பதிவின்போது, எம்எஸ்விக்கும், கண்ணதாசனுக்கும் சிறிது மனக்கசப்பு ஏற்பட்டது. அதில் உள்ள ஒரு பாடலை எழுத கவிஞரை அழைத்திருந்தார் எம்எஸ்வி. நெடுநேரமாகியு‌ம் அவர் வராததால் எம்எஸ்வி அதிருப்தி அடைந்தாராம். "இனிமேல் கண்ணதாசனிடம் பாடல் கேட்கப் போவதில்லை" என்று தனது நண்பர்களிடம் வருத்தப்பட்டுக் கொண்டாராம் மெல்லிசை மன்னர். இதனைக் கேள்விப்பட்ட கவிஞர் உடனே எம்எஸ்வியை வந்து சந்தித்து, வருத்தம் தெரிவித்தாராம். அப்போது படத்திற்கான கதை ஓ‌ட்டத்துடன், எம்எஸ்வி தன்னைப் பற்றிச் சொன்ன வார்த்தையையும் மனதில் வைத்து, கண்ணதாசன் வடித்த வரிகள் படத்துடன் மட்டும் பொருந்திப்போகவில்லை. எம்எஸ்வி - கண்ணதாசன் நட்பையும் எடுத்துக்காட்டியது. அந்தப் பாடல்தான் " சொன்னது நீதானா? சொல். சொல்.என்னுயிரே" பாடல் அதே படத்தில், கா‌தலியின் வருகையை எதிர்நோக்கியிருக்கும் காதலன், அவள் கணவனுடன் வருவதைப் பார்த்து வேதனையில் துடித்து பாடும் பாடலும் கண்ணதாசனின் வரிகள்தான்.

காதலில் தோற்றவர்களின் மனதுக்கு ஆறுதல் தரும் ' எங்கிருந்தாலும் வாழ்க. உன் இதயம் அமைதியில் வாழ்க' இன்றும் என்றும் இதுவே. இந்தப் பாடிலல் எம்எஸ்வியின் மெல்லிசையில் ஏ.எல்.ராகவன் அந்தப் பாடலில் வாழ்ந்திருப்பார். கண்ணதாசன் திரையுலகிற்கு வந்த‌ புதிதில் சில படங்களைத் தயாரித்துள்ளார். அதில் மாலையிட்ட மங்கை மட்டும் வெற்றி பெற்றது. சிவகங்கைச் சீமை, கவலையில்லாத மனிதன் போன்ற படங்கள் தோல்வியைத் தழுவின. கருப்புப் பணம் என்ற படத்தை தயாரித்து கதையின் நாயகனாகவும் நடித்திருந்தார். கருப்புப்பணம் படத்தில் வரும் "எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்" என்ற பாடல் முத்துராமனும், ஜெயலலிதாவும் நடித்த சூரியகாந்தி படத்தில் ஒரு பாடலுக்கு மேடையில் தோன்றி கவிஞரே‌ பாடலைப் பாடி நடித்திருப்பார். இன்றும் விரும்பிக் கேட்கப்படுகிறது அந்தப் பாடல். அதுதான் "பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சவுக்கியமா?" என்ற பாடல்
இன்றைக்கும் கூட பலருக்குத் தாலாட்டாகவும், துன்பங்களுக்கு ஆறுதலாகவும், மனம் நொந்து கிடப்போருக்கு உத்வேகமாகவும் இருப்பது கவிஞரின் பாடல் வரிகள்தான்.

மெல்லிசை மன்னர்களின் இசையில் மட்டுமின்றி, சமகாலத்தில் ஆதிக்கம் செலுத்திய திரையிசைத் திலகம் கேவி மகாதேவ‌னின் இசை மெட்டுகளிலும் கவிஞர் எண்ணற்ற செவிக்கினிய பாடல்களைத் தந்துள்ளார். இருவர் ‌உள்ளம், பணக்கார குடும்பம் என அந்த இரண்டு ஆளுமைகளின் இணை செவிக்கினிய பாடல்களைத் தந்தது. குறிப்பாக தேவர் பிலிம்ஸ் படங்களில் எம்ஜிஆருக்கு அவர் எழுதிய பாடல்கள் திகட்டாத தேனமுதமாகும்.

கவிஞரிடமிருந்து அருவியென மடை திறந்து கொட்டிய பாடல்கள் என்றென்றும் தமிழ் ரசிகர்களின் செவிகளில் ரீங்காரமி்ட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அதனால்தான் தங்களது இசையில் அவரது பாடல் இடம்பெற வேண்டும் என்று விரும்பினர் அனைத்து இசையமைப்பாளர்களும். வானம்பாடி என்ற படத்தில் கவிஞரின் கைவண்ணத்தில் தீட்டப்பட்ட தித்திக்கும் ஒரு பாடலை மிகவும் மெய்மறந்து பாடியிருப்பார் பி.சுசீலா. வரலாற்றுப் பின்னணி உடைய படங்கள் மற்றும் சமூகப் படங்கள் மட்டுமின்றி புராணகங்ளை பி்ன்னணியாகக் கொண்ட படங்களுக்கும் கவிஞர் மிக அற்புதமான பாடல்களைத் தந்திருக்கிறார். கேவி மகாதேவனின் இசை வெள்ளத்தில் வந்த திருவிளையாடல், சரஸ்வதி சபதம் படங்களில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களையும் எ‌ழுதியது கவிஞரே. திருவிளையாடல் படத்தில் வரும் "பாட்டும் நானே பாவமும் நானே." மற்றும் 'இசைத்தமிழ் நீ செய்த.'

ஜெய்சங்கர், கே.ஆர்.விஜயா நடித்து 1967ஆம் ஆண்டு வெளியான பட்டிணத்தில் பூதம் படத்தில் வரும் ஒரு பாடல் அரசியல் அர்த்தம் பொதிந்தது என்று அப்போது சொல்வார்கள். சொல்லின் செல்வர் ஈவிகே சம்பத் திமுகவிலிருந்து விலகி, தமிழ் தேசியக் கட்சி எனும் கட்சியை தொடங்கியிருந்த காலம். அதில் சம்பத், நெடுமாறன், கண்ணதாசன் என மூவர் மட்டுமே இருந்தனர். இவர்களின் முக விலாசத்தை மட்டுமே வைத்து கட்சியை நடத்த இயலாத சூழல் உருவானது. கட்சியை கலைத்துவிட்டு காங்கிரசில் ஐக்கியமாகி விடுங்கள் என்று சிலர் சொன்ன நிலையில், காமராசரை எப்படி அணுகுவது என்று அவர்கள் யோசித்தனர். இதனை தான் நடத்தி வந்த தென்றல் பத்திரிகை மூலம் கவிதையாக எழுதி வெளிப்படுத்தினார் கண்ணதாசன். இதற்கு முரசொலியில், "ஓணான் வேலி தாண்டப் போகிறது" எனக் கிண்டலடித்து கவிதை வெளியிட்டார் திமுக தலைவர் மு.கருணாநிதி. இப்படியொரு சூழ்நிலையில் தயாரான பட்டிணத்தில் பூதம் படப் பாடலின் மூலம், காமரசருடன் சேர விரும்புவதை பாடலாக எழுதினார் கண்ணதாசன் எனப் பேச்சு உண்டு. அந்தப் பாடல், கதையோட்டத்துடனும் மிகவும் ஒத்துப் போயிருக்கும். அதுதான் கவிஞர்.பட்டணத்தில் பூதம் படத்தில் வரும் "அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி.உன்னைச் சேரும் நாள் பார்க்கச் சொல்லடி." என்ற பாடல்தான் காமராஜரை மனதில் வைத்து எழுதியது.

திரையுலகில் மாபெரும் ஆளுமையாக இருந்த எம்ஜிஆருக்கும் கண்ணதாசனுக்கும் இடையே அவ்வப்போது ஊடல் இருந்து வந்தது. எம்ஜிஆரை அரசியல் மேடைகளில் கவிஞர் பல முறை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். அதுபோன்ற தருணத்தில் 1965ஆம் ஆண்டு வெளியான ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு எழுதப்பட்ட வரிகள் எம்ஜிஆருக்கு திருப்தியளிக்கவில்லை. அந்தக் கவிஞர் பல முறை மாற்றி மாற்றி எழுதிக்கொடுத்தும் எம்ஜிஆருக்குப் பிடிக்கவில்லை. பின்னர் அவருக்குத் தெரியாமல் கண்ணதாசனை தொடர்பு கொண்டு பேசி விவரங்களை எடுத்துக் கூறியுள்ளார் மெல்லிசை மன்னர். பாடலுக்கு ஊதியம் தரப்படும் என்றும், கவிஞரின் பெயரை டைட்டிலில் போட மாட்டோம் எனவும் அவர் கூறிவிட்டார். அதற்குக் கண்ணதா‌சன், "உங்கள் பெயரில்தான் எந்தப் பாடலும் வந்ததில்லையே, இந்தப் பாடலுக்கு உங்கள் பெயரைப் போட்டுக்கொள்ளுங்கள்" எனக் கூறிவிட்டாராம் கவியரசர். பின்னர் அந்தப் பாடலை எம்ஜிஆருக்கு‌ காட்டினார்களாம். "யார் எழுதியது? கவிஞர்தானே?" எனக் கேட்டாராம் எம்ஜிஆர். அத்துடன் டைட்டிலில் கண்ணதாசனுக்கென தனி கார்டு போடுங்கள் எனச் சொன்னாராம். எம்ஜிஆர் கவிஞர் என்றழைப்பது கண்ணதாசனை மட்டும்தான் என்று திரையுலகில் பேச்சு உண்டு. இந்தத் தகவல்களை மெல்லிசை மன்னரே ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். கேட்போரை கிளர்ந்தெளச் செய்யும் அந்தப் பாடல் காலம் கடந்து இன்றும் நிற்கிறது.ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வரும் "அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்." என்ற பாடலே அது

எம்ஜிஆர் தயாரித்து நடித்து இயக்கிய உலகம் சுற்றும் வாலிபன் படத்திலும் சில பாடல்களை எழுதினார் கவிஞர். தாளம் போட வைக்கும் அந்தப் பாடல்கள் எம்ஜிஆர் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவராலும் ரசிக்கப்படுகிறது. மாட்டுக்கார வேலன், உரிமைக்குரல் ‌என எம்ஜிஆர் படங்களில் கவிஞரின் பங்க‌ளிப்புத் தொடர்ந்தது. எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது, ஒரு நாள் அவரது வீட்டிலிருந்து கண்ணதாசன் வீட்டிற்கு தொலை‌பேசி அழைப்பு வந்தது. அப்போது அவர் தனது மகன் திருமணம் சம்பந்தமாக வெளியூர் சென்றிருந்தார். ஒரு வழியாக கவிஞரை தொடர்பு கொண்ட எம்ஜிஆர், அவரை உடனே சென்னைக்கு வருமாறு அழைத்தார். எதற்காக வரச் சொல்கிறார் எனத் தெரியாமல் சென்னை வந்து எம்ஜிஆரை சந்தித்தார்.

"தங்களை தமிழக அரசின் அரசவைக் கவிஞராக நியமிக்க முடிவு செய்துள்ளேன். சம்மதம் என்ற ஒரே வார்த்தையை மட்டுமே உங்களிடம் எதிர்பார்க்கிறேன்" என்று கூறியுள்ளார். செய்வதறியாது திக்குமுக்காடிப் போனார் கவிஞர். பின்னர் நடந்தேறிய விழாவில் உணர்ச்சிவயப்பட்ட கண்ணதாசன், " நான் இறந்துவிட்டால் அரசு மரியாதை கிடைக்கும். இந்தச் சிறப்பை எனக்கு வழங்கிய எம்ஜிஆருக்கு முன்கூட்டியே நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்று உணர்ச்சிவயப்பட்டு கூறினார் கவிஞர். டிகே பிரகாஷ் ரா‌வ் இயக்கத்தில் 1972ல் திரைக்கு வந்தது வசந்த மாளிகை எனும் காதல் காவியம். அந்தக் கால இளைஞர்களை திரையரங்கிற்கு படையெடுக்க வைத்த படம். சிவாஜி, வாணிஸ்ரீயி்ன் நடிப்பு, திரையிசைத் திலகத்தின் மெட்டில் கவிஞர் எழுதிய பாடல்கள் என அதற்குப் பல காரணங்கள் உண்டு. கண்ணதாசன் எப்போதும் ‌மதுவில் திளைத்துக் கிடப்பார் என்றொரு கருத்து உண்டு. ஆனால், கவிஞர் பாடல்கள் எழுதும்போது மது அருந்துவதில்லை.

வசந்த மாளிகை படத்தில் வரும் "ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்.பல எண்ணத்தில் நீந்துகின்றேன். " பாடல் மற்றும் "யாருக்காக.இது யாருக்காக. இந்த மாளிகை. வசந்த மாளிகை." பாடல்எழுபதுகளின் மத்தியில் இளையராஜாவின் வருகைக்குப் பின்னர் புதுவடிவ‌ம் பெற்றது திரையிசை. அதுவரை பாடல்கள் புனையப்பட்டு மெட்டு உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்த காலம் மாறியது. தான் இசையமைத்த முதல் படமான அன்னக்கிளிக்கு கண்ணதாசன் தான் பாடல் எழுத வேண்டும் என்று விரும்பினார் இளையராஜா. ஆனால் கவிஞர் அப்போது அவசரப் பயணமாக வெளிநாடு சென்றதால் வாய்ப்புக் கனியவில்லை. ஆனாலும், ராஜாவின் இரண்டாவது படமான பாலுட்டி வளர்த்த கிளி படத்தில் அனைத்துப் பாடல்களையும் கவிஞரே எழுதினார். இது கவிஞர் எழுதிய பாடல்தானா என வியக்க வைக்கும் வகையில், 16 வயதினிலே படத்தில் சில பாடல்களை எழுதினார். மூலை முடுக்கெல்லாம் வெளுத்து வாங்கியது அந்தப் பாடல்கள். 16 வயதினிலே படத்தில் வரும் ஆட்டுக்குட்டி முட்டையிட்டு மற்றும் செவ்வந்திப் பூ முடிச்ச பாடல்

கே.விஜயன் இயக்கி சிவாஜி நடித்த தியாகம் படத்தில் டிஎம்எஸ்க்கு சில பாடல்களை கொடுத்தார் ராஜா. அதனை எழுதியது கவிஞர்தான். எஸ்பிபி போன்ற சிலரின் பாடல்களில் காட்டிய நவீனத்தை டிஎம்எஸ்சின் பாடல்களில் அவர் காட்டவில்லை. அவர் பாடிய பாடல்களின் நீட்சியாகவே அந்தப் பாடல்களை படைத்திருந்தார் இளையராஜா. அதிவ் வரும் சில வரிகளை கண்ணதாசனைப் போன்ற கலைஞனைத் தவிர வேறு யாராலும் வடிக்க முடியாது. இளையராஜாவின் முதல் படத்திற்கு கவிஞர் பாட்டெழுதவில்லை என்றபோதிலும், தனது கடைசிப் பாடலை இசைஞானியின் இசையில் வெளியான மூன்றாம் பிறை படத்திற்குத்தான் எழுதி தந்திருந்தார்.

அதனை எழுதுவதற்கு முன் கண்ணப்பனை பார்த்து "இளையராஜா ரொம்ப அதிர்ஷ்டசாலி, இறைவவன் நான் இனிமேல் திரைப்படத்திற்கு பாட்டெழுதப் போவதில்லை. இதுதான் எனது கடைசிப் பாட்டு" என்றே கூறினாராம். அதாவது மரணம் தன்னை நெருங்கிவிட்டது என்பதை அவர் உணர்ந்துவிட்டார். கண்ணதாசன் அவ்வப்போது பேசிய நிகழ்ச்சிகள் மற்றும் பொதுக்கூட்டங்களில் தனது இறுதி நாட்கள் பற்றியும், மரணம் குறித்தும் பேசி வந்தார். "மரணத்தை இறைவன் ரகசியமாக வைத்திருப்பதால்தான் மனிதன் ஓரளவாவது மனிதாபிமானத்துடன் நடந்து கொள்கிறான்" என்று குறிப்பிட்டுள்ளார் ஒரு நிகழ்ச்சியில்.

இளையராஜா மிகவும் நேசித்த கவிஞர்களில் முதன்மையானவர் கண்ணதாசன். தான் திரைத்துறைக்கு வர உந்துதலாக இருந்தது எம்எஸ்வியும், கண்ணதாசனும் தான் என்று பல முறை கூறியுள்ளார் ராஜா. தனது வாழ்க்கையின் பிற்பாதியில் திராவிட சிந்தனையிலிருந்து விடுபட்டு, அர்த்தமுள்ள இந்து மதம் என்ற நூலை எழுதினார் கவிஞர். பிறப்பால் இந்து என்றபோதிலும் மதவேற்றுமை பாராமல் ஏசு காவியம் தீட்டியிருக்கிறார். கவிஞர் தனது வாழ்க்கை வரலாற்றை ஒளிவு,மறைவு இல்லாமல் வனவாசம் என்ற பெயரில் புத்தகமாக எழுதியுள்ளார். அவருடைய மறுபக்கத்தையும் படம்பிடித்து காட்டுகிறது அந்த நூல். 1980ல் சேரமான் காதலி என்ற நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றிருக்கிறார் கவிஞர். பாடல்களால் திரை உலகை கட்டி ஆண்ட கவிஞர் 1981ஆம் ஆண்டு ஜூலை 24ல் உடல்நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர் சிகிச்சை அளித்தும் பலனின்றி அக்டோபர் 17 ஆம் தேதி இவ்வுலகை விட்டு மறைந்தார். பின்னர் அவரது உடல் சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. என்றும் மனதை விட்டு நீங்கா பாடல்களைத் தந்துவிட்டு மறைந்த கவிஞருக்கு லட்சக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு கண்ணதாசனின் உடல் அக்டோபர் 22ஆம் தேதி அரசு மரியாதையுடன் எரியூட்டப்பட்டது.

நான் நிரந்தரமானவன் அழிவதில்லை, எந்த வகையிலும் எனக்கு மரணமில்லை- இது கவிஞரின் வரிகள்- அது என்றும் பொய்ப்பதில்லை


Advertisement

Advertisement
[X] Close