Published : 22,Jun 2018 05:32 PM

ஆரம்பக்கால விஜய்யின் பெஸ்ட் திரைப்படங்கள்

Birthday-special---Vijay---s-finest-performances-in-films

 விஜய்யின் ஆரம்பகால படங்களை பார்த்தவர்கள் யாரும் அவர் இந்தளவுக்கு மாஸ் ஹீரோவாக வருவார் என்று நம்பி இருக்கமாட்டார்கள். அவ்வளவு ஏன் விஜய்யே அதை நம்பி இருக்க மாட்டார். ஆனால் அந்த நம்பிக்கை ஒருவருக்கு இருந்தது. அது வேறு யாருமில்லை. அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகருக்குதான். அவர் தன் மகனுக்காக பல முயற்சிகளை செய்திருக்கிறார். ஆனால் அந்த முயற்சி எல்லாம் முதற்கட்ட விஜய்க்கு முட்டுக் கொடுத்தது. இன்று இருக்கும் விஜய் என்பவர் எஸ்.ஏ.சி.யே எதிர்பார்க்காத விஜய். அதான் உண்மை.  ‘ஆரம்பத்துல நான் அவரை கொண்டு வந்தேன் என்பது உண்மை. ஆனால் அவர் இன்று என்ன நினைக்குறார்? என்ன செய்ய போகிறார்? என்ன முடிவெடுப்பார்? என்பது எதுவும் எனக்கு தெரியாது. நான் அதிகம் கோபக்காரன். ஆனால் என் மகனின் அமைதியை பார்த்து நான் அவரிடம் நிறைய கற்றுக் கொள்கிறேன் அதான் நிஜம்” என்பார் அவரது அப்பா. 

இயக்குநர் எஸ்.ஏ.சி, 1992ல் ‘நாளைய தீர்ப்பு’ படத்தில் அறிமுகப்படுத்திய போது ‘ஏதோ மகனின் ஆசைக்காக அப்பா விஷப் பரீட்சையில் ஈடுபடுகிறார்’ என்றது கோடம்பாக்கம். ஆனால் அந்தப் படம் பாக்ஸ் ஆபீஸை அசைத்து பார்த்தது. அதன் பின் அவரை தக்க வைக்க அவர் போராடினார். அப்பாவாக என்ன செய்ய முடியுமோ அதை கொஞ்சமும் சளைக்காமல் செய்தார் எஸ்.ஏ.சி. அறிமுகம் மிக எளிமையாக நடந்துவிட்டாலும் விஜய் ஒரு அமோக வெற்றியை சுவைக்க சில வருடம் காத்திருக்க வேண்டியிருந்தது. ‘பூவே உனக்காக’ படத்திற்குப் பிறகு விஜய் ஒரு கமர்ஷியல் ஹிட் ஹீரோவாக உருவானார். அந்தப் படம் ஒரு குடும்ப பாங்கான கதை என்பதால் விஜய்யை வீடு தோறும் அழைத்து போய் உட்கார வைத்தது. 200 நாட்கள் வரை ஓடி அது சாதனை படைத்தது. அது விஜய்யால் நடிக்கவும் முடியும் என்பதை நிரூபித்தது. 

அதற்கு அடுத்து விஜய்யை உயிரோட்டமான காதல் நாயகனாக காட்டிய படம் ‘காதலுக்கு மரியாதை’. இயக்குநர் ஃபாசில் விஜய்யை வேறு உயரத்திற்கு அழைத்து போனார். கதை ரீதியாகவும் இசை ரீதியாகவும் இந்தப் படம் விஜய்யின் வாழ்க்கையில் ஒரு வலுவான அடையாளத்தை கொடுத்தது. ‘என்னை தாலாட்ட வருவாளா?’ பாடலை பாடாத ஆட்கள் இல்லை என சொல்லும் அளவுக்கு விஜய் ஒரு ஹீரோவானார். இருவேறு மதங்களை சேர்ந்த காதலர்கள் எப்படி எந்தப் பாதிப்பும் இல்லாமல் இணைகிறார்கள் என்ற கதையின் புதிய போக்கு அந்தப் படத்தை திரும்பி பார்க்க வைத்தது. படத்தில் ஷாலினியும் விஜய்யும் சரியான ஜோடியாக பொறுந்திப் போய் இருந்தார்கள். இந்தப் படம் ஒரு சென்சேஷனல் ஹிட் ஆனது. அதற்கு இளையராஜாவின் இசை ஒரு உயிராக இருந்தது. இந்தப் படத்தில்தான் விஜய் முதன்முறையாக தமிழக அரசின் விருதை வாங்கினார். 

இந்தப் படத்திற்கு பிறகு விஜய்யின் பெஸ்ட் பெர்ஃபாமன்ஸ் வெளிப்பட்ட திரைப்படம் ‘துள்ளாத மனமும் துள்ளும்’. இயக்குநர் எழில் 1999ல் இயக்கிய இந்தப் படம் விஜய் வாழ்க்கையில் மாபெறும் சக்சஸை சம்பாதித்து தந்தது. இந்தப் படத்தின் இறுதி கட்டக்காட்சிகளை ரசிகர்கள் கண்களை அசைக்காமல் பார்க்கும் அளவுக்கு படத்தோடு ஒன்றி போய் உட்கார்ந்திருந்தனர். அந்தளவுக்கு கதையின் போக்கு உயிர் நிறைந்ததாக இருந்தது. இப்படத்தில் இடம் பெற்ற விஜய்யின் ‘குட்டி’ கதாப்பாத்திரம் இன்று வரை தனித்து தெரியும் பாத்திரம். மேலும் இந்தப் படத்தில் சிம்ரனின் நடிப்பு மிகச் சிறப்பாக வெளிப்பட்டிருந்தது. ஒட்டு மொத்த படத்தையும் தன் இசையால் எஸ்.ஏ.ராஜ்குமார் தூக்கி சுமந்திருந்தார். இந்த வெற்றியால் வேறு சில மொழிகளுக்கு இப்படம் போய் சேர்ந்தது. 

இதை மீறி போனது எஸ்.ஜே.சூர்யா இயக்கிய ‘குஷி’. ஜோதிகாவும் விஜய்யும் இணைந்த நடித்த படம். இன்று வரை மிகச் சிறப்பான படமாக இருவருக்கும் அமைந்துள்ளது. விஜய் மறக்க முடியாத நடிப்பை வெளிப்படுத்திய இந்தப் படம் அவரது ரசிகர் மட்டத்தை தாண்டி பல எல்லைகளுக்குப் போனது. விஜய்யின் ‘ஷிவா’ பாத்திரம் ஜோதிகாவின் ‘ஜென்னி’ பாத்திரத்தை இன்று வரை யாரும் மறந்திருக்க முடியாது. இதில் விஜய் ஒரு ரொமாண்டிக் ஹீரோவாக முகம் மாறியிருந்தார். குட்டிக் குட்டி சேட்டைகளால் அவர் வேறு ஒரு நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். பாடல்கள் ரீதியாகவும் பல சாதனைகளை செய்த படம் ‘குஷி’. 

விஜய்க்கு வேறு முகத்தை வழங்கிய படம் ‘நேருக்கு நேர்’. அதில் சூர்யாவும் விஜய்யும் மிக இயல்பாக எதிரும் புதிருமாக நடித்திருந்தனர். இயக்குநர் வசந்தின் மென்மையான திரைமொழி விஜய்யை ஒரு உணர்ச்சிகரமான மட்டத்திற்கு கொண்டு சென்றது. அதே போல் ‘ப்ரண்ட்ஸ்’. சித்திக் இயக்கிய திரைப்படம். விஜய்யுடம் இணைந்து வடிவேலு மொத்த படத்தையும் தூக்கி நிறுத்தி இருப்பார். விஜய்க்கு காமெடியும் கைவந்தக் கலையாக மாற்றியது ‘ப்ரண்ட்ஸ்’. காமெடி, காதல், ரொமான்ஸ் என மூன்று வழிகளில் நகர்ந்த இந்தப் படத்தின் கதை பலரையும் கட்டிப்போட்டது. 2001ல் வெளியான இந்தப் படம் 175 நாட்கள் ஓடி சாதித்தது. 

விஜய்யின் ஆரம்பக்கால வெற்றி படங்கள் இவை. இதை மீறி விஜய் இன்று வந்து சேர்ந்திருக்கும் இடம் பலருக்கும் ‘மெர்சல்’. அவரை அழைத்து ராகுல் பேசுகிறார். அன்னா அசாரே பேசுகிறார். விஜய் இன்று இந்திய அளவிற்கு அறிய படும் ஒரு பர்சனாலிட்டி. அதாவது ஆளுமை. அந்த ஆளுமையை அவர் அதிகம் பேசாமல் கட்டமைத்திருக்கிறார். பேசி பெயர் சம்பாதிக்கும் தமிழத்தில் பேசாமலே ஒருவர் பெரிய கூட்டத்தை கட்டி எழுப்பி இருக்கிறார். அதான் ஆச்சர்யம்.   

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்