2 சிறுமிகளின் உயிர் பறிபோன அவலம்! - டாக்டரும் இல்லை.. ஆம்புலன்ஸும் இல்லை..

2 சிறுமிகளின் உயிர் பறிபோன அவலம்! - டாக்டரும் இல்லை.. ஆம்புலன்ஸும் இல்லை..
2 சிறுமிகளின் உயிர் பறிபோன அவலம்! - டாக்டரும் இல்லை.. ஆம்புலன்ஸும் இல்லை..

மயிலாடுதுறை அருகே மண் சரிவில் சிக்கிய இரண்டு சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 

நாகை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள ராஜகோபாலபுரம் ராஜாகாலணி கீழத்தெருவைச் சேர்ந்த வழக்கறிஞர் ராமமூர்த்தி. இவர் வீட்டுக்கு, உறவினர்களின் மகள்களான கும்பகோணம் ஆனைக்காரன்பாளையத்தை சேர்ந்த தேவேந்திரன் மகள் சியாமளா (வயது 7), சுதாகர் மகள் வர்ஷினி (10) ஆகியோர் வந்திருந்தனர். வீட்டில் இருந்து விளையாடுவதற்காக இரண்டு சிறுமிகளும் வெளியே சென்றுள்ளனர். அப்போது அருகே இருந்த கொம்புகாரன்குட்டை என்ற குட்டையில் விளையாடியுள்ளனர். 

அவர்கள் விளையாடிக்கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக மண் சரிவி ஏற்பட்டுள்ளது. சிறுமிகள் சட்டென அங்கிருந்து ஓடுவதற்குள், மண் சரிவில் சிக்கியுள்ளனர். இதில் பயந்து சிறுமிகள் இருவரும், “யாராச்சும் காப்பாத்துங்க” என அலறியுள்ளனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு, உறவினர்களும் அக்கம்பக்கத்தினரும் ஓடிவந்து சிறுமிகளை மீட்டுள்ளனர். இருப்பினும் அவர்கள் மண் சரிவில் சிக்கிய அவர்கள், உயிருக்கு ஆபாத்தான நிலையில் இருந்துள்ளனர்.

உடனே 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்த உறவினர்கள், நீண்ட நேரமாக ஆம்புலன்ஸ் வராததால் இருசக்கர வாகனத்தில் சிறுமிகளை குத்தாலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் இல்லாத அவல நிலையால் விரக்தி அடைந்த உறவினர்கள், மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிறுமிகளை கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிறுமிகள் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

10 நாட்களுக்கு முன்னர் மண் எடுக்கப்பட்ட குழியை இன்னும் மூடாமல் வைத்திருந்ததே சிறுமிகளின் உயிரிழப்புக்கு காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அத்துடன் ஆம்புலன்ஸ் வராததையும், அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததையும் கண்டித்து சிறுமியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com