
பெரம்பலூர் மாவட்டம் திருவாளந்துறை- கடலூர் மாவட்டம் சின்னக்கல்பூண்டி இடையே வெள்ளாற்றில் பாலம் கட்டப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்த நிலையில் பாலம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு விட்டது என்று ஒரு துறை அதிகாரியும், பாலம் கட்ட சாத்திய கூறுகள் இல்லை என்று மற்றொரு துறை அதிகாரியும் பதில் அளித்துள்ள சம்பவம் பொதுமக்களிடையே குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் - கடலூர் மாவட்டங்களை இணைக்கும் வகையில் திருவாளந்துறை -கீழக்கல் பூண்டி இடையே வெள்ளாற்றில் ரூ.14 கோடியில் உயர்நிலை மேம்பாலம் அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம்தேதி பெரம்பலூரில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இந்த பாலம் அமைக்கப்படுவதால் பெரம்பலூர் மாவட்டம் திருவாளந்துறை பகுதி மக்கள் கடலூர் மாவட்டப்பகுதிகளுக்கு செல்லும் பயண தூரம் 15 கிலோமீட்டர் குறையும். இது மட்டுமின்றி சென்னை, கடலூர், சேலம், ஆத்தூர் ஆகிய நகரங்களுக்கு செல்லும் தூரமும் குறையும் என்பதால் இந்த பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் முதல்வரின் அறிவிப்பு வெளியாகி 10 மாதங்கள் ஆன நிலையில் பாலம் வருமா வராதா என்று தெரியாததால், அந்த பகுதி பொதுமக்கள் கவலையடைந்தனர்.
இந்நிலையில் பாலம் கட்டும் திட்டத்தின் நிலை குறித்து அறிந்து கொள்ள, அது குறித்த விபரம் கேட்டு திருவாளந்துறை இளைஞர்கள் முதல்வரின் தனிப்பிரிவிற்கு கடிதம் அனுப்பினர். இந்த மனுவிற்கு கடந்த மார்ச் மாதம் வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் தரப்பில் இருந்து அனுப்பப்பட்ட பதிலில், திருவாளந்துறை- கீழக்கல்பூண்டி இடையே ஓடும் வெள்ளாறு முழுவதும் கடலூர் மாவட்டத்திற்கு சொந்தமானது. எனவே பாலம் கட்டும் பணியை தொடங்க சாத்தியமில்லை என்று தெரிவித்திருந்தனர். இதனைத்தொடர்ந்து திருச்சி கோட்ட நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் மே மாதம் அனுப்பிய பதிலில் இந்த பகுதியில் முதல்வர் அறிவிப்பின் படி பாலம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.16 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகள் அதற்கான பணிகளை செய்து வருகின்றனர். திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டவுடன் உரிய அங்கீகாரம் மற்றும் நிர்வாக அனுமதி பெற்று பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே திட்டம் குறித்த தகவலுக்கு இரண்டு அரசு துறை சார்ந்த அதிகாரிகள் நேரெதிர் பதிலை கொடுத்துள்ளதையறிந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு திருவாளந்துறை பகுதியில் உள்ள வெள்ளாற்றில் குறுக்கே கற்கள் நடப்பட்டு, சிவப்பு கொடிகளை மட்டும் சிலர் நட்டு வைத்து விட்டு சென்றுள்ளனர் என்று தெரிவிக்கும் திருவாளந்துறை இளைஞர்கள், பாலம் அமைக்கப்படுமா அமைக்கப்படமாட்டாதா என்பது குறித்து தெளிவான தகவல்களை தெரிவிக்க வேண்டும் தங்கள் பகுதியில் கண்டிப்பாக உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர்களை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். தமிழக முதல்வர் அறிவித்திருந்த ஒரு திட்டம் அமல் படுத்த நிதி ஒதுக்கப்பட்டு விட்டது என்று ஒரு துறை அதிகாரியும், திட்டத்தை செயல்படுத்த சாத்திய கூறுகள் இல்லை என்று மற்றொரு துறை அதிகாரியும் பதில் அளித்துள்ள சம்பவம் பொதுமக்களிடையே குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.