
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் பற்றிய ஆவணங்களை தமிழக அரசிடம் மத்திய அரசு கேட்டுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று தற்போது சிறையில் இருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் , ஜெயக்குமார் ஆகிய 7 பேரின் உடல் ஆரோக்கியநிலை, மனநிலை,பொருளாதார பின்னணி, சமூக பின்னணி, குடும்பச்சூழல் குறித்து மத்திய அரசு விவரங்களை கேட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை விவரம் மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அனுப்பிவைக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வதாக தமிழக அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த சூழலில் இது தொடர்பாக ஏற்கனவே தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மறு ஆய்வு மனு மீதான விசாரணையில் , 7 குற்றவாளிகளையும் விடுவிப்பது குறித்து மத்திய அரசின் கருத்தை 3 மாதங்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என கடந்த ஜனவரி23ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் மத்திய அரசு தமிழக அரசிடம் ஆவணங்களை கேட்டுள்ளது.இதனால் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரயும் விடுவிப்பது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும் என எதிர்பார்க்கபடுகிறது.