Published : 19,Mar 2017 02:53 AM
ஒரு வாரத்தில் எடை குறைந்த உலகின் குண்டு பெண்மணி

மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உலகிலேயே மிகவும் குண்டான பெண், கடந்த ஒரு வாரத்தில் 140 கிலோ எடை குறைந்துள்ளார்.
எகிப்து நாட்டைச் சேர்ந்தவர் இமான் அகமது. இந்தப் பெண்ணுக்கு நாளுக்கு நாள் உடல் எடை அதிகரித்து வந்தது. ஐநூறு கிலோ, அதாவது அரை டன் எடை இருந்த அவருக்கு பக்கவாதம், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல பிரச்னைகளும் இருந்தன. இதையடுத்து, மும்பையில் உள்ள சைஃபி மருத்துவமனைக்கு சிறப்பு விமானம் மூலம் இமான் அகமது கொண்டு வரப்பட்டார்.
கடந்த 11-ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு, முசாபல் லக்தவாலா தலைமையிலான மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். இப்போது இமான் 360 கிலோவாக குறைந்திருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. உடல் பாகங்கள் தொடர்ந்து வீக்கமடையக்கூடிய கோளாறு சிறுவயது முதல் இமானுக்கு இருந்ததாகக் கூறிய மருத்துவர்கள், அவருக்கு 2 மணி நேரத்துக்கு ஒரு முறை குறைந்த உப்பு கொண்ட புரோட்டின் திரவ உணவு மட்டுமே வழங்கப்படுவதாகத் தெரிவித்தனர்.
உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்கு வயிற்றைச் சுருங்கச் செய்யும் அறுவைசிகிச்சை முறை மேற்கொள்ளப்படுவதாக மும்பையின் சைஃபி மருத்துவமனை தெரிவித்துள்ளது.