Published : 07,Jun 2018 04:42 PM
மாணாக்கர்கள் உயிரை மாய்த்துக் கொள்ளக்கூடாது- மு.க.ஸ்டாலின்

மாணவ, மாணவிகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவை ஒருபோதும் எடுக்கக்கூடாது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத விரக்தியில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு தனது வேதனையை தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய பாரதிய ஜனதா அரசின் பிடிவாதத்தால் வந்த நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவு சிதைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார். தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற முடியாமல் தமிழக அரசு இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மாணவ, மாணவிகளின் கனவுக்கு தற்காலிகமாக நீட் தேர்வு தடை போட்டாலும், நிரந்தரத் தீர்வு கிடைக்கும் நாள் தொலைவில் இல்லை என்றும் திமுக அதற்காக தொடர்ந்து போராடும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எனவே, மாணவ மாணவிகள் யாரும் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவை எடுக்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.