Published : 07,Jun 2018 04:15 AM

9ஆம் தேதி தூத்துக்குடி செல்கிறார் முதல்வர் பழனிசாமி

TN-CM-EPS-likely-to-visit-Thoothukudi-on-Saturday-to-meet-Victims

துப்பாக்கிச்சூடு நடந்த தூத்துக்குடிக்கு வரும் 9ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செல்கிறார்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராட்டம் நடத்திய மக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 17 வயது பள்ளி மாணவி உள்பட 13 பேர் பலியாயினர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை உருவாக்கியது. துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் நேரில் சென்று பார்த்தனர். பின்னர், முதலமைச்சரும், துணை முதல்வரும் தூத்துக்குடி சென்று மக்களை சந்திக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர்.

இதனையடுத்து, துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து ஆறுதல் கூறினார். அவருடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ ஆகியோரும் சென்றனர். இருப்பினும், முதலமைச்சர் பழனிசாமி தூத்துக்குடி செல்லவில்லை. 

இந்நிலையில், துப்பாக்கிச்சூடு நடந்த தூத்துக்குடிக்கு வரும் 9ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செல்கிறார். துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மே 28ம் தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தூத்துக்குடி சென்ற நிலையில் தற்போது முதல்வர் பழனிசாமி செல்ல உள்ளார்.