
சென்னை பட்ரோட்டில் துப்புரவுப்பணியாளர்களை மதுபோதையிலிருந்த காவலர் தாக்கிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
சென்னை பட்ரோடு கண்டோன்மெண்ட் பகுதியில் கிரிசாமியும், அவரது மனைவி லட்சுமியும் ஒப்பந்த துப்புரவுப்பணியாளர்களாகவுள்ளனர். வழக்கம் போல் குப்பை சேகரிக்கச் சென்ற போது காவலர் ஆறுமுகம் என்பவர் தனது வீட்டிற்குள் உள்ள குப்பைகளை அள்ளிச்செல்லுமாறு கூறியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்ததால், ஆறுமுகமும் அவரது நண்பர் மகேஷும் லட்சுமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனை தடுத்த கிரிசாமியையும் அவர்கள் தாக்கினர்.
தங்களை தாக்கிய எம்.ஜி.ஆர் நகர் காவல்நிலைய முதல்நிலை காவலர் ஆறுமுகம் மற்றும் அவரது நண்பர் மகேஷ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தம்பதி சாலையில் குப்பை வண்டியை சாய்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த கண்டோன்மெண்ட் அதிகாரிகள் துப்புரவுப்பணியாளர்களை சமாதானப்படுத்தி காவல்நிலையம் அனுப்பி வைத்தனர். அங்கும், அவர்களை காவல்துறையினர் சமாதனப்படுத்தி அனுப்பினர்.