Published : 05,Jun 2018 10:30 AM

“நீட் தேர்வுக்காக எத்தனை பேரை இழக்கப்போகிறோமோ?”- ஸ்டாலின் வேதனை

M-K-stalin-commet-C--Vijayabaskar-Review

வேறு ‌வழியின்றி நீட் தேர்வை தமிழகம் பின்பற்ற வேண்டியதாகிவிட்டது என சுகாதாரத்துறை அமைச்சர் சி விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு தோல்வியால் மாணவி பிரதீபா தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். சென்ற வருடம் அனிதாவையும்,இந்த வருடம் பிரதீபாவை இழந்திருக்கும் நாம் நீட் தேர்வுக்காக இன்னும் எத்தனை பேரை இழக்கப்போகிறோமோ தெரியவில்லை என ஸ்டாலின் கூறினார். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா இன்னும் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டிய ஸ்டாலின், தட்டிக் கேட்க யாரும் இல்லாததால் இந்த நிலைக்கு ஆளாகி இருக்கிறோம் என கூறினார்.

இதனையடுத்து பதில் அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், பிரதீபா மரணம் வருந்தத்தக்க கூடியது என கூறினார். நீட் தேர்வு வேண்டாம் என்ற கொள்கையில் அரசு உறுதியாக இருக்கிறது என கூறிய விஜயபாஸ்கர், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற சட்டரீதியாக அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்தது என கூறினார். கடைசி விளிம்பு வரை தமிழகம் இதற்காக போராடியது, உச்சநீதிமன்றத்தில் எதிர்பார்த்த தீர்ப்பு கிடைக்காததால் நீதிமன்ற தீர்ப்பை மதித்து வேறு வழியின்றி நீட் தேர்வை பின்பற்ற வேண்டியதாகிவிட்டது என தெரிவித்தார். 

இதனையடுத்து பேசிய பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் நீட் தேர்வை கொண்டு வந்ததே மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசுதான் என குற்றம்சாட்டினார். இந்த ஆண்டு நீட் தேர்வில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 1,337 பேர் வெற்றி பெற்றுள்ளனர் என தெரிவித்தார். முன்னதாக, நீட் தேர்வை மத்திய அரசு கொண்டு வரும் போது காங்கிரஸ் அரசுடன் கூட்டணியில் இருந்தவர்கள் திமுகவினர் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்த ஸ்டாலின், நாங்கள் கூட்டணியில் இருந்தாலும் 2011 வரை நீட் தேர்வை தமிழகத்திற்குள் அனுமதிக்கவில்லை என தெரிவித்தார். எனினும் விஜயபாஸ்கரின் பேச்சை கண்டித்து திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்