‘கண்ணீருக்கு இரங்காத மனம் உண்டோ’.. ஒரு தாயின் கண்ணீருக்கு மனம் இறங்கி, தன் மகனைக் கொலை செய்தவரை மன்னித்திருக்கிறார் இன்னொரு தாய். நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம் கேரள மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் முஹ்ரம் அலி மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஆசிப் ஆகிய இருவரும் சவுதி அரேபியாவிலுள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் ஒன்றாக வேலை பார்த்தனர். பணியிடம் மட்டுமில்லாமல் ஒரே அறை எடுத்து இருவரும் ஒன்றாகத்தான் தங்கியிருந்தனர். அப்போது ஒருநாள் இரவு தூக்கத்தில் இருந்த ஆசிப்பை முஹ்ரம் கழுத்தறுத்து கொலை செய்தார். இருவருக்கும் பெரிய அளவில் பகையில்லாத போதும் முஹ்ரம் ஏன் அந்த வெறிச்செயலில் ஈடுபட்டார் என தெரியவில்லை. இதனையடுத்து முஹ்ரம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் முஹ்ரமுக்கு தூக்குத் தண்டனை வழங்க சவுதி அரேபியன் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன் முஹ்ரம் மனநிலை சரியில்லாதவர் போல் நடந்துகொண்டார். எனவே அவருக்கு வழங்கப்பட இருந்த தூக்குத் தண்டனை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது முஹ்ரம் நல்ல மனநிலையில் இருப்பதாவும், அவருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அவருக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்ற சவுதி அரேபியன் நீதிமன்றம் ஆயத்தமானது.
முஹ்ரமிற்கு, ரஸியா என்ற மனைவியும் திருமண வயதில் இரண்டு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். தனது கணவருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட இருப்பதை அறிந்த ரஸியா பதறினார். எந்தக் கதவை தட்டினால் கணவரின் உயிர் காப்பாற்றப்படும் என நினைத்த ரஸியாவிற்கு ஒரு யோசனை உதித்தது. தனது கணவர் கொலை செய்த ஆசிப்பின் அம்மாவிடம் உதவி கேட்கலாம் என நினைத்த ரஸியா அதற்காக உத்தரப்பிரசேதத்தில் இருந்து கேரளாவிற்கு பயணித்தார். கேரளாவில் ஆசிப்பின் தாயான ஆயிஷா பீவியை நேரில் சந்தித்தார். உறவினர்களும் அப்போது அருகில் இருந்தனர். அந்த நேரத்தில் யாரும் எதிர்பாராதவிதமாக ஆயிஷாவின் காலில் விழுந்த ரஸியா ‘எப்படியாவது என் கணவரை காப்பாற்றுங்க அம்மா’ எனக் கதறி அழுதார். இதனை சற்றும் எதிர்பார்க்காத ஆயிஷா கண்ணீருடன் ரஸியாவை தூக்கினார். “ என் மகனை அல்லாஹ் அழைத்துக் கொண்டார். அதுதான் விதி. இன்னொரு உயிர் போய் என் மகனை மீண்டும் என்னருகே அழைத்து வந்துவிடாது. அவர்களாவது நிம்மதியாக இருக்கட்டும்” எனக் கூறி முஹ்ரமை மன்னித்தார் ஆயிஷா. மேலும் மன்னிப்பு வழங்கிய கடிதத்திலும் ஆயிஷா கையெழுத்திட்டார்.
ஆயிஷா குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என கேரளாவைச் சேர்ந்த ஒரு அமைப்புத்தான் போராடி வந்தது. இதன் முன்னாள் செயலாளர் குன்ஹலாசன் கூறும்போது “ முஹ்ரம் கொலை செய்துவிட்டு தப்பித்து ஓடி ஒளியவில்லை. அவர் அதே அறையில்தான் விடியும் வரை படுத்து தூங்கியுள்ளார். ஆகவே இது திட்டமிட்ட கொலை அல்ல. அவருக்கு கல்யாண வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். மேலும் ஒரு சின்ன பையன் உள்ளார். நாங்கள் பெற்றுள்ள மன்னிப்பு கடிதம் விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். விரைவில் முஹ்ரம் விடுதலையாவார்” எனத் தெரிவித்தார். மேலும் கூறும்போது,“ ஆயிஷா குடும்பத்திற்கு சொந்தமாக ஒரு வீடு கூட கிடையாது. மன்னிப்பு வழங்கியதற்காக அவர்கள் எந்தப் பண உதவியையும் எதிர்பார்க்கவில்லை” எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து ரஸியா கூறும்போது, “ என் கணவரின் வருகைக்காக காத்திருக்கிறேன். ஆயிஷா அம்மா அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. அவர்களுக்கு இறைவன் எல்லா வளமும் நலமும் வழங்கட்டும்” என்றார்.
Courtesy: TheNewsMinute
Loading More post
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த ரவுடி சில மணி நேரத்திலேயே வெட்டிப்படுகொலை
டீ விலை ₹20; சர்வீஸ் சார்ஜ் ₹50; நல்லா இருக்கு இந்த பார்ட்னர்ஷிப்: IRCTC-ஐ சாடிய மக்கள்!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: யார் கேப்டன்?
பக்ரைனில் இறந்த தொழிலாளி...நல்லடக்கம் செய்ய கைகோர்த்த ரஜினி ரசிகர் மன்றத்தினர்
மீண்டும் மிரட்டும் கொரோனா - பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்